விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பெரிய ஆலைகள் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து பட்டாசுகளை தயாரித்து வரும் நிலையில், நடுத்தர மற்றும் சிறு ஆலைகள் பாதுகாப்ப முறையில் பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெயபால், 45. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அந்த பகுதியில் உள்ள பனையபடி பட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில், சுமார் 10 அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக சோல்சா பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று பணிக்கு வந்திருந்த கண்டியாபுரத்தை சேர்ந்த சண்முகராஜ் என்ற தொழிலாளி 8 மணியளவில் மருந்து கலவை செய்யும் அறைக்கு சென்று மருந்து தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டதில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் உடல் சிதறி பலியான நிலையில், அந்த அறை முழுவதும் தரைமட்டம் ஆனது. அவர் சம்பவ இடத்தில் பலியானார். தீயணைப்புத்துறையினர் தீயை அனைத்து உடலை மீட்டனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலை அரசின் லைசென்ஸ் பெற்ற ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.