டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உயர்நீதி மன்றம் ஜாமின் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) கைது செய்ததை எதிர்த்தும், கலால் கொள்கை வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,  மனுத் தாக்கல் செய்துள்ளார்.  மனுவில், டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னை கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் வலியுறுத்திய வழக்கறிஞர் சிங்வி,   நம்பத்தகாத ஆவணத்தின் அடிப்படையில்  கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.

இதற்கு பதில் அளித்த தலைமைநீதிபதி சந்திரசூடு,  தங்களது கோரிக்கை தொடர்பாக,  மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொண்டது,  அதை பார்த்துவிட்டு, வழக்கு விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலிப்பேன் என தெரிவித்துள்ளதாகவும் சிங்வி தெரிவித்துள்ளார்.