பில்ட் அப் சினிமாக்கள்.. இளைஞர்களை பிடிக்கும் வெறி..

சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்

ரு இளைஞனும் இளம்பெண்ணும் நெருக்கமாக பழகுகிறார்கள். பின்னாளில் இளைஞரை பற்றி சில தவறான தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தவுடன், அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டு விலகுகிறார். ஆனால் இளைஞனோ விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை துரத்துகிறார். விவகாரம் வெடித்து பெண் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு அந்த இளைஞனை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்.

ஒரு முறை இல்லை, இரண்டு முறை விவகாரம் காவல் நிலையத்திற்கு செல்ல, இனி அந்த பெண்ணை தொந்தரவு செய்யமாட்டேன் என்று இளைஞர் எழுதிக் கொடுத்துவிட்டு வருகிறார். ஆனாலும் இளம்பெண்ணை கடந்த மாதம் 12ஆம் தேதி அந்த இளைஞர் எங்கேயோ ஒருமுறை கடத்திப் போக முயற்சிக்கையில் நடுவழியில் அந்தப் பெண் தப்பித்து வந்து காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்.

அதன் பிறகு அந்த இளைஞர் தலைமறைவு. இப்படிப்பட்ட பின்னணியில் இரு தினங்களுக்கு முன்பு நண்பர்களோடு வருகிறார் இளைஞர். பெற்றோருடன் பெண் அவரது வீட்டில் இருக்கும்போதே அந்த வீட்டை உடைத்து அவர்கள் கண்ணெதிரிலேயே பெண்ணை கதறக்கதற தூக்கிக் கொண்டு போகிறார். இப்படியும் நடக்குமா என்ற பீதியில் உறைந்து போன பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து பெண் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து வைத்து கடத்தல் வண்டி நம்பரை கண்டுபிடிக்கின்றனர்.

கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களில் ஒரு செல்போன் நம்பரும் சிக்கியது. அதை வைத்து டிரேஸ் செய்ததில் கார் 150 கிலோ மீட்டருக்கு அப்பால் டோல் கேட் அருகே மடக்கப்படுகிறது. இளம்பெண் மீட்கப்பட்டு கடத்தல் கும்பலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்படுகின்றனர். கடத்தலில் தொடர்புடைய மற்ற 11 பேரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். பெண் கடத்தலில் தொடர்பு தொடர்புடைய 18 பேரும் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சிக்குவார்கள்.

மயிலாடுதுறையை மையப்படுத்தி அண்மையில் அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் இவை.

நண்பனுக்காக உயிரையே கொடுப்போம் என்று மார்தட்டிய இளைஞர்கள், நண்பனை மனதார வெறுக்கும் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திக்கொண்டு போய் இன்று சட்டத்திலும் சிக்கி இருக்கிறார்கள். இவர்கள் சிக்கியது மட்டுமல்லாமல் இவர்களின் குடும்பத்தின் மானமும் வழக்குகளுக்காக எதிர்கொள்ளப் போகும் பொருளாதாரமும் சிக்கியிருக்கின்றன.

பெண்ணை வீடு பூந்து தூக்குபவன் ஹீரோ..

கடத்திக் கொண்டு போதல் வீரத்தின் அம்சம்.

அவனுக்கு உதவுவது நட்பின் அடையாளம்

பெண்ணைப் பெற்றவர்கள், கேட்டால் தர வேண்டிய அற்ப நாய்கள்.

பெண்ணின் அப்பா உலகமகா மொக்க பீசு “

தமிழ் சினிமாக்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் சிறப்பான கைடு லைன்கள் இவை.

பரஸ்பரம் புரிதல் உடனான ஆத்மார்த்தமான ஜோடியாக இருந்து, எவ்வளவு காலம் காத்திருந்தும் பெற்றோர் சம்மதிக்கவே மாட்டேன் என்கிறபோது, வேறு வழியே இல்லை என்ற நிலை வரும். அப்போது பெண்ணே விருப்பப்பட்டு உடன் வரும் போது காதலனுக்காக உதவுவது நண்பர்களின் கடமை.

ஆனால் நண்பனை மனதார வெறுக்கும், பிடிக்கவே பிடிக்காத ஒரு பெண்ணை கடத்தும் விஷயத்தில் உடந்தையாக இருப்பது என்பது அக்கிரமத்திலும் அக்கிரமம். நாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் எங்களை எவனும் ஒன்றும் புடுங்க முடியாது என்ற கொழுப்பின் உச்சம்.

இந்த சம்பவத்தையே பெற்றோர் ஸ்தானத்தில் வைத்து யோசித்து பாருங்கள்.

கடத்தப்பட்ட இளம்பெண் தற்போதைக்கு மீட்கப்பட்டாலும் எந்த நேரத்தில் இன்னும் என்ன நடக்குமோ என அவருடைய மனநிலை ஒரு பீதியிலேயே இருக்கும். திருமணம் செய்து கொடுத்த பிறகும் எந்த காலம் வரை அவருக்கு இதன் தொடர்ச்சியான பாதிப்புகள் துரத்திக் கொண்டிருக்கும் என்பதை சொல்வதற்கில்லை.

ஒரே வரிதான்..ஆண் பிள்ளைகளை சரியாக வளர்க்காத வரை இது போன்ற குற்றங்களுக்கு முடிவே இல்லை.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். தற்போது சினிமா காட்சிகளில் மது அருந்தும் போதும் புகை பிடிக்கும் போதும், குடி குடியை கெடுக்கும் புகை பிடித்தால் புற்று நோய் வரும் என்று எச்சரிக்கை வாசகம் போடுகிறார்கள் அது போல இனி வரும் காலங்களில் கொலை செய்தால் மரண தண்டனை பாலியல் பலாத்காரம், கடத்தல் போன்றவற்றுக்கு இவ்வளவு ஆண்டு தண்டனை என ஒவ்வொரு குற்றக் காட்சியின் போதும் அதற்கு உண்டான எச்சரிக்கை வாசகம் போட வேண்டும் போல.