டில்லி

புரூனே, மோசம்பிக், அல்ஜீரியா ஆகிய நாடுகளில் இந்தியத் தூதராக பணி புரிந்த அசோக் அம்ரோகி கொரோன சிகிச்சைக்கு மருத்துவமனை கிடைக்காததால் மரணம் அடைந்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு இந்தியாவில் மிகவும் அதிகரித்து வருகிறது.    நேற்று மட்டும் தினசரி பாதிப்பு 3.88 லட்சத்தைக் கடந்துள்ளது.  நேற்று வரை 1.87 கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டு 2.03 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்றைய கணக்கின்படி சுமார் 31.65 லட்சம் பேருக்கு இன்னும் பாதிப்பு உள்ளது.  எனவே மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது.

புரூனே, மோசம்பிக், மற்றும் அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இந்தியத் தூதராக பணியாற்றிய அசோக் அம்ராகிக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன.   கடந்த ஒரு வாரமாக உடல்நிலைக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்க்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

அவருக்கு மேதாந்தா மருத்துவமனையில் ஏப்ரல் 27 அன்று இரவு 8 மணிக்கு இடம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  எனவே அவருடைய மகன் அவரை இரவு 7.30க்கு அங்கு அழைத்து சென்றுள்ளார்.  அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவமனையில் தெரிவித்ததால் அவர் 1.30 மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.  அசோக் அம்ரோகி அதுவரை காரில் அமர்ந்திருந்தார்.

பரிசோதனை முடிவுகள் கிடைத்த உடன் மருத்துவமனை அனுமதிக்காக அவர் மகன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தது.   நேரம் மிகவும் கடந்ததால் அசோக் அம்ரோகியின் மகன் அங்குள்ளோரிடம் மருத்துவ உதவி கேட்டுக் கெஞ்சி உள்ளார்.  அவர் கதறியும் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.   அவரை காரில் இருந்து அழைத்து வர ஒரு ஸ்டிரெச்சர் அல்லது சக்கர நாற்காலி கூட அவர்கள் அளிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட 5 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு மருத்துவமனையில் அப்போதும் அனுமதிக்கப்படாத நிலையில் அசோக் அம்ரோகி காரிலேயே மரணம் அடைந்துள்ளார்.  இதையொட்டி அசோக் அம்ரோகியின் குடும்பத்தினர் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  முன்னாள் இந்தியத் தூதருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என அவர் மனைவி யாமினி அம்ரோகி கேள்வி எழுப்பி உள்ளார்.

அசோக் அம்ரோகி மருத்துவமனை அனுமதிக்குக் காத்திருந்து மரணம் அடைந்த பிறகு அதைக் குறிப்பிடாமல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார்..   அவர் தூதராகப் பணி புரிந்த நாட்டு அரசுகளும் அசோக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.