குஜராத் தேர்தல் அறிவிப்பு தாமதமாவது சந்தேகத்துக்குறியது : முன்னாள் தேர்தல் ஆணையர்

டில்லி

முன்னாள் தேர்தல் ஆணையர் குரைஷி குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பை தாமதப்படுத்துவது சந்தேகத்தை உண்டாக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்களின் சட்டசபையின் ஆயுட்காலம் வரும் 2018ஆம் வருடம் ஜனவரியுடன் முடிவடைகிறது.  தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின் எந்த ஒரு புதிய நலத் திட்டமும் மாநில அரசு அறிவிக்கக் கூடாது என்பது தேர்தல் நடைமுறை விதியாகும். ஆனால் தேர்தல் ஆணையம் இமாசல பிரதேச தேர்தல் தேதிகளை மட்டும் அறிவித்து விட்டு குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதிகள் இன்னும் அறிவிக்காதது மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி உள்ளது.

இது குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் குரைஷி, “இமாசல பிரதேச தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம் எதற்காக குஜராத் தேர்தல் தேதிகளை அறிவிக்கவில்லை?  இதற்காக எந்த ஒரு காரணமும் தெரியவில்லை.  பிரதமர் மோடி அடுத்த வாரம் குஜராத் பயணத்தை மேற்கொள்வதற்கும் இந்த தாமதத்துக்கும் ஏதும் தொடர்பு இருக்கலாமோ என்னும் சந்தேகம் உண்டாகிறது.

இமாசலப் பிரதேச சட்டசபையின் ஆயுட்காலமும், குஜராத் சட்டசபையின் ஆயுட்காலமும் ஒரே நேரத்தில் முடிவடையும் போது தனித்தனி தேர்தல்கள் தேவையே இல்லை.  இரண்டு தேர்தலுக்கும் தனித்தனி தேதிகள் அறிவித்து முடிவுகளும் வெவ்வேறு தேதிகளில் வரும் போது நிச்சயம் முதலில் வரும் முடிவின் தாக்கம் அடுத்து வரும் தேர்தலில் தென்படும்.  அது மட்டுமின்றி தேர்தல் நடைமுறை விதிகள் அமுலுக்கு வராத மாநிலத்தில் செய்யப்படும் நலத்திட்ட அறிவிப்புகள் மற்ற மாநிலத்தின் தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும்” எனக் கூறி உள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர், “இது குறித்து ஆணையம் ஏற்கனவே உள்துறை அமைச்சகத்துடன் பேசிய பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   தேவையான பாதுகாப்புப் படையினர் உள்ளனரா என்பதைப் பொறுத்தே ஆணையம் தேர்தல் தேதிகளை முடிவு செய்துள்ளது” என தெரிவித்தார்.  அதே நேரத்தில் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர், “உள்துறையுடன் பாதுகாப்புப் படையினர் குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.  தேர்தல் தேதிகள் அறிவிப்புக்க்குப் பின்னரே எங்களை ஆணைய அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.  இருமாநிலத்திலும் அமைதி நிலவுவதால் அதிகமான பாதுகாப்புப்படைகள் தேவை இருக்காது.  இரு மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் பாதுகாப்புப் படைகள் தேவை என்றால் அது குறித்து முடிவு எடுக்க அமைச்சகம் தயார் நிலையில் உள்ளது” எனக் கூறி உள்ளார்.
English Summary
Ex election commissioner doubts about gujarat election dates delayed