வாஷிங்டன்,

நாடு முழுவதும் ஜூன் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விதமாக பரிவர்த்தனைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில ரியல்எஸ்டேட் துறையான மனை வர்த்தகத்தையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஆலோசனை நடைபெறுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவின்  ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களிடையே சிறப்புரையாற்றியபோது இந்த தகவலை அருண்ஜேட்லி தெரிவித்து உள்ளார்.

உலக வங்கி மாநாட்டில் கலந்துகொள்ள ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் அமெரிக்கா சென்ற நிதி அமைச்சர், அங்குள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, இந்தியாவில் மிக அதிக அளவு வரி ஏய்ப்பு செய்யப்படும் துறை ரியல் எஸ்டேட் துறை. இந்த துறையில் தான்   மிக அதிக அளவு பணம் கைமாறுகிறது.  இந்த துறை  இதுவரை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வில்லை.

தற்போதைய நிலையில், விற்பனை நோக்கத்துக்காகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படு கிறது. எனினும், நிலம் மற்றும் பிற அசையாச் சொத்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

ஆனால், இந்த துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர பல மாநிங்கள் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  அதன் காரணமாக அடுத்த மாதம் கவுகாத்தியில் நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.

இதுகுறித்து மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்றார். மேலும், ரியல் எஸ்டேட் துறை  ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் வாடிக்கையாளர்கள் ஒரே வகையான வரியைச் செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.

மேலும், இந்தியாவில் அமல்படுத்திய பண மதிப்புக்கு குறித்து பேசும்போது,  அது பொருளாதாரச் சீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கையே ஆகும். எல்லோரும் கருதுவதைப் போல கருப்புப் பணம் வைத்திருப்பவர்களிடமிருந்து அந்தப் பணத்தைக் கைப்பற்றுவது பணம் வாபஸ் நடவடிக்கையின் நோக்கம் அல்ல. அது நீண்ட கால நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்த  நடவடிக்கை காரணமாக  பணம் யாரிடம் இருந்தது என்ற விவரம் அரசுக்குத் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் சுமார் 18 லட்சம் பேர் அளவுக்கு அதிகமாக வங்கிகளில் பணம் செலுத்தியுள்ளதையும் கண்டு பிடித்துள்ளோம் என்றார்.

உலகிலேயே இந்தியாவில்தான் வரி செலுத்துவோர் விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக வரி செலுத்துவோரின்  எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் வங்கித் துறையை மறுக்கட்டமைக்கும் திட்டப் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.