சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா? வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

டில்லி,

பிரபலமான சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பெண்களையும் அனுமதிக்குமாறு கோரிய வழக்கு, அரசியல சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து அதற்குரிய உடைய அணிந்து கோவிலுக்கு வருவார்கள்.

இந்த கோவிலுக்குள் பொதுவாக பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகள், அதுவும் பூப்பெய்தாத பெண் குழந்தைகளும், 50 வயதுக்கு மேற்பட்ட மாதவிடாய் நின்ற பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  இதுமாதிரியான கட்டுப்பாடுகள் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும்,  தேவசம்போர்டின் இதுபோன்ற கட்டுப்பாடுகளை நீக்க கோரியும்,   சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் நோட்டீசக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு, ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரு சாரார் மக்களின் பாரம்பரியமான நம்பிக்கைகளில் கோர்ட்டு தலையிடக்கூடாது என்றும் தெரிவித்து வருகிறது.

இதன் காரணமாக, இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், வழக்கு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

கோவிலுக்குள் பெண்கள் செல்வதை கட்டுப்படுத்த முடியுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த பிரச்சனைக்கு அரசியலமைப்பு அமர்வு மூலம் தீர்வு காண வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.

எனவே, இந்த வழக்கை இனி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.
English Summary
The Supreme Court will on Friday pronounce verdict on whether to refer to a Constitution Bench case about women go to Kerala’s famed Sabarimala temple