உயர் சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் மத்தியஅரசை கேள்வி கணைகளால் வறுத்தெடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்…

Must read

டெல்லி:  பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் மத்தி யஅரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கணைகளால் துளைத்தெடுத்தனர். மேலும்,  ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு கிடையாது என்பதுதான் சமத்துவமான அரசியலமைப்பா? என்றும் கேள்வி எழுப்பினர்.

கடந்த 2019ம் ஆண்டு மத்திய பாஜக அரசு,  இந்தியாவில் பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இந்த இடஒதுக்கீடு உடனே அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில்,  சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்றுதான் கூறப்பட்டு இருக்கிறதே தவிர, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று கூறப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உள்பட பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்தர பட், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அரசியலமைப்பு சட்டத்தின் 103வது பிரிவில் செய்யப்பட்ட திருத்தம் அதன் அடிப்படை அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்த வில்லை. சமூதாயத்தில் தற்போது பின்தங்கிய ஒரு சமூகம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அப்படி இருக்காது என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற  நீதிபதி ரவீந்திர பட், நாடு முழுவதும்  40 சதவீத பழங்குடியின மக்கள் சமூதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏழையிலும் ஏழையானவர்ளாக இருக்கிறார்கள், அவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது, பழங்குடியினர், பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தான் ஏழையிலும் ஏழையானவர்கள் என்று கூறிவிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு உங்களுக்கு கிடையாது என்று கூறுவது தான் சமத்துவமான அரசியலமைப்பா என அவர் கேள்வி எழுப்பினர்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என்பதற்கான வரையறையே தெளிவற்றதாக உள்ளதாக நீதிபதி ரவீந்திர பட் சுட்டிக்காட்டினார்.

அதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி யு.யு.லலித், பொருளாதார ரீதியான அளவுகோல் தற்காலிகமானது தான் என்றும், சமூதாய ரீதியான அளவுகோல் தான் நிலையானது என்றார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த மற்றொரு நீதிபதியான தினேஷ் மகேஸ்வரி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை அடையாளம் காண சரியான வழிகாட்டுதல்கள் கூட வகுக்கப்படவில்லை என்று மத்தியஅரசு மீது குற்றம் சாட்டினர்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய தலைமைநீதிபதி,   இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கும் மேல் இருக்க கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு எப்படி கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

பொதுப் பிரிவினருக்கான 50 சதவீதத்தில் இருந்து இந்த 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்த நீதிபதிகள், மத்தியஅரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன்,  அது குறித்து பதிலளிக்க மத்தியஅரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

More articles

Latest article