கொல்கத்தா:

மோடி அரசிடம் இருந்து  இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற அனைவ ரும் ஒன்றுபட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான  மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கி உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று கொல்கத்தாவில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 19 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே,  மோடி தலைமையிலான அரசை கடுமையாக சாடினார்.

“இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று இந்த மாநாட்டின் வாயிலாக நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள் கிறேன் என்று அழைப்பு விடுத்தவர், பாஜகவினர் அவர்களது கார்ப்பரேட் நண்பர்களுக்கு உதவு வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர் என்று குற்றம் சாட்டியவர்,  2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்தார்களே? அந்த வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பினார்.

தற்போது மோடி தலைமையிலான ஆட்சி காரணமாக தேசம் ஆழ்ந்த நெருக்கடியில் இருக்கிறது. குடிமக்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளனர். அரசியல் ரீதியாத சுதந்திர அமைப்புகள் கைகட்டப்பட்டு கிடக்கின்றன. இந்திய அரசியலமைப்பை நிலைகுலையச் செய்யும் சக்திகளை நாம் தோற்கடிக்க வேண்டும் என்றவர்,  நாம் அனைவரும் ஒன்றுபடும்வரை மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்தையும் மதச்சார்பற்ற பண்புகளையும் சிதைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர்  சோனியா காந்தி அனுப்பிய தகவல் பொதுக்கூட்டத்தில் வாசித்தார்…

“வரவிருக்கும் பொதுத் தேர்தல் நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்கொள்ளப்படும். இன்று நடைபெற்ற இந்த மாநாடு மிகவும் முக்கிய மானது. கர்வம் கொண்ட மோடி அரசை எதிர்த்துப் போராட நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களை இது ஒருங்கிணைத்திருக்கிறது. எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என சோனியாவின் செய்தியையும் கார்கே வாசித்துக் காட்டினார்.