அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை : அழைக்கப்படாத அத்வானியின் வாழ்த்துச் செய்தி

Must read

டில்லி

யோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜைக்குக் கோவில் அமையப் பாடுபட்டு தற்போது அழைக்கப்படாத மூத்த பாஜக தலைவர் அத்வானி வாழ்த்துச் செய்தி அறிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மிகவும் பாடுபட்டவர்களில் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் ஒருவர் ஆவார்.   இன்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பூமி பூஜை நடைபெறுகிறது.   இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.   இந்த விழாவில் கலந்துக் கொள்ள 100க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ராமர் கோவில் அமைக்க அரும்பாடு பட்ட அத்வானிக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை.   அவரை தொலைபேசி மூலம் அழைத்துள்ளனர்.  இதற்குப் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.   வயது மூப்பு காரணமாக அவரை அழைக்கவில்லை எனக் கூறப்பட்ட போதிலும் தொடர்ந்து அத்வானியை பாஜக தலைமை ஓரங்கட்டி வருவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ராமர் கோவில் பூமி பூஜை குறித்து அத்வானி, “எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு விருப்பம் இப்போது நிறைவேறுகிறது.  அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.  ராமர் பிறந்த இடம் அயோத்தி ஆகும்,  எனக்கு மட்டுமின்றி இந்தியர்கள் அனைவருக்கு இன்று சரித்திரம் மட்டும் உணர்ச்சிப் பூர்வமான முக்கியமான தினம் ஆகும்.

ராமர் பிறந்த அயோத்தியில் ராமருக்குப் பிரம்மாண்டமான கோவில் எழுப்புவது பாஜகவுக்கு மிகவும் விருப்பமும் ஆசையும் ஆகும்.   இதற்காகக் கடந்த 1990 ஆம் ஆண்டு சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை ரத யாத்திரை நடத்த எனக்கு இறைவன் ஒரு வாய்ப்பு அளித்தார்.  அதில் கலந்துக் கொண்டோருக்குத் தனி சக்தியையும் வலிமையும் அது அளித்தது.

இந்தப் புனிதமான வேளையில் இந்த ராம ஜென்ம பூமி கோவில் கட்ட உதவிய சன்னியாசிகள், தலைவர்கள், இந்தியப் பொதுமக்கள், உலக அளவில் பங்கேற்பை அளித்தோர், ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ராமர் கோவில் அமைய உள்ளதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது இந்தியர்களுக்கு இடையேயான ஒற்றுமையை வளர்க்கும். இந்தியச் சரித்திரம் மற்றும் கலாச்சாரத்தில் ராமர் தனி இடம் பெற்றுள்ளார்.  இதில் நமக்குத் தனிப் பெருமை உள்ளது.  இந்த கோவில் மூலம் அனைத்து இந்தியர்களும் ராமரின் பால் ஈர்க்கப்படுவார்கள் என நான் நம்புகிறேன்.

மேலும் இந்த கோவில் உலக அளவில் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார பெருமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எனவும் நம்புகிறேன்  ராம ராஜ்ஜியத்தில் நீதி என்பது அனைவருக்கும் கிடைக்கும் என்பது இதில் தெளிவாகி உள்ளது.” எனத் தொலைக்காட்சி மூலம் செய்தி அளித்துள்ளார்.

More articles

Latest article