சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பாஜக வந்தாலும், நாங்கள், முன்வைத்த காலை பின்வைப்பதில்லை , வாபஸ் வாங்க மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி ஆதரவாளருமான ஜெயக்குமார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் காரணமாக அங்கு பலமுனை போட்டி நிலவி வருகிறது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், தேமுதிக, அமமுக, நாம் தமிழ்ர் கட்சி வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவது என இழுபறி நீடித்து வந்த நிலையில், எடப்பாடி தரப்பு தனி வேட்பாளரை களமிறக்கியதுடன், ஐக்கிய ஜனநயாக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தல் அலுவலகமும் திறந்தது. மேலும், அதிமுகவின் பேனரில் பாஜக பெயரும் இடம்பெறவில்லை. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், ஓபிஎஸ் தரப்பு தனி வேட்பாளரையும் களமிறக்கியது. அத்துடன், பாஜக வேட்பாளரை அறிவித்தால், நாங்கள் வாபஸ் வாங்குவோம் என ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இதனால் பாஜக யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து திணறி வருகிறது. இதுதொடர்பாக மேலிடத்தில் ஆலோசனை செய்ய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹுவை சந்தித்த பின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து உள்ளார். அப்போது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் 238 பூத்கள் உள்ளன. போலியான வாக்குகள் செலுத்த முயற்சி நடக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் . வாக்குகளை சரிபார்க்குமாறு வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்கள், அதிமுகவின் பேனரில் பாஜகவின் பெயர் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்தவர், “தட்டச்சின் போது ஏற்பட்ட பிழையின் காரணமாக தான், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயர் இடம்பெற்றது. தவறு திருத்தப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி என பெயர் மாற்றப்பட்டு உள்ளது என்றார்.
மேலும், அதிமுக உள் விவகாரங்களில் பாஜக என்றும் தலையிட்டதில்லை. அண்ணாமலை தலையீட்டின் பெயரால் எல்லாம் பேனரில் பெயர் மாற்றப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கான மரியாதை வழங்கப்படும். புகைப்படம் இல்லை என்பதால் மட்டும் அவர்களுக்கு மரியாதை இல்லை என கருத முடியாது. கூட்டணி தர்மத்தின்படி தான் அதிமுக செயல்படும்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதால், கூட்டணி இறுதியான பிறகு அனைவரது புகைப்படங்களும் இடம்பெறும். தேர்தலுக்கு ஆதரவு தரும்படி நாங்கள் கோரியுள்ளோம்.
பாஜக ஒரு தேசிய கட்சி, முடிவெடுக்க இன்னும் நேரம் உள்ளது. உரிய நேரத்தில் அவர்கள் முடிவெடுத்து தெரிவிப்பார்கள், இன்றே நிலைப்பாட்டை அறிவியுங்கள் என தொல்லை செய்ய முடியாது” என, ஜெயக்குமார் கூறினார்.
தொடர்ந்து, பாஜக வேட்பாளரை அறிவித்தால், வேட்பாளரை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளாரே அதுபோல உங்கள் அணியும் வேட்பாளரை வாபஸ் பெறுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிட்டாலும் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற மாட்டோம். நாங்கள் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை என ஜெயக்குமார் பதிலளித்தார்.
இதன் மூலம் ஈரோடு இடைதேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தாலும், ஈபிஎஸ் அணி தேர்தலில் எதிர்த்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை முடிவடைந்து நாட்கள் கடந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்காமல் இழுத்தடிப்பதால், அதிமுகவின் சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுபோல, தேர்தல் ஆணையம் யாருடைய தலைமையை அங்கீகரிக்கும் என்பதும் விடை தெரியா கேள்வியாகவே உள்ளது.