மோடிஜீீ… இப்படித்தான் கறுப்பை வெள்ளையாக்குகிறார்கள்!

Must read

500, 1000 நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த ஒரு சம்பவம்.
குழந்தைக்கு திடீரென சுகவீனம். பெற்றோர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைக்கிறார்கள். ஆனால் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. காரணம் ஆம்புலன்ஸ்காரர், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற முடியாது என்கிறார். பெற்றோர், சில 100 ரூபாய்களைப் பெறுவதற்குள் இக்குழந்தையின் உயரி பிரிந்துவிட்டது.
இதே போல, செல்லத்தக்க நோட்டு இல்லாததால்,  இந்தியாவில் கடந்த இரு வாரங்களில் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
ஆனால், இப்படி இறந்தவர்கள் அனைவரும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான்.   அதிகமாக கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் இறந்ததாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.  காரணம் அதிகப் பணம் படைத்தவர்களுக்குக் கறுப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்பது நன்றாகத் தெரியும்.
ஆம்… மோடியின் “செல்லாது” அறிவிப்புக்குப் பிறகும் கறுப்புப் பணம் எப்படியெல்லாம் வெள்ளையாக மாற்றப்படுகிறது தெரியுமா?
1
கடவுளே.. கடவுளே
இந்தியாவில் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த அடுத்த சில நொடிகளில் கறுப்புப்பண முதலைகள் தட்டியது ஆன்மிக அறக்கட்டளைகளைத்தான்.
இதற்கு ஒரு உதாரணம்,
மதுரா கோவர்தன் கோவில் அர்ச்சகர். இவர்  50 லட்ச கருப்புப் பணத்தை 20 சதவீத கமிஷன் தொகைக்கு மாற்ற உதவி செய்வதை, ஏபிபி செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவை என்றில்லை.. அனைத்து மதத்தைச் சார்ந்த அறக்கட்டளைகளும் இதில் ஈடுபடுகின்றன என்கின்றன ஆய்வுகள்.
பின் தேதியிலான வைப்பு நிதிகள்
அதிகக் கறுப்புப் பணம் உடையோருக்கு  கூட்டுறவு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் ஒரு சலுகையை அறிவிக்கிறது. அதாவது, “செல்லாது”  அறிவிப்புக்கு முந்தைய தேதியில் வைப்பு நிதியில் முதலீடு செய்யச் சொல்கிறது.  குறிப்பாகச் சிறு நகரம், டவுன் மற்றும் கிராமங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் NBFC நிறுவனங்கள் இத்தகையை பின்தேதியிட்ட வைப்பு நிதி சேவை எளிமையாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கறுப்பு வெள்ளையாகும்.
ஏழைகளின் உதவி
ஏழை மற்றும் நடுத்தர மக்கள்  தங்களிடம் இருக்கும் சில 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி வாசலில் நின்றுகொண்டு இருக்கிறார்கள். பெரும் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் இந்த ஏழை மற்றும் நடுத்தர மக்களை பயன்படுத்தி கறுப்பை வெள்ளையாக்குகிறார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் 2.49 லட்சம் வரை வைப்பு நிதி போடப்படுகிறது.
பிரச்சினை முடிந்த பிறகு இவர்களின் கணக்கில் இருக்கும் தொகையை அவர்கள் மூலமாகவே வித்டிரா செய்யப்படுகிறது. மத்திய அரசு வங்கி வைப்புக் கணக்கில் 2.5 லட்சம் ரூபாய் வரை வைப்பு செய்வோர் மீது எவ்விதமான கேள்விகளும் கேட்கப்போவதில்லை.
2
வட்டியில்லாக் கடன்
கறுப்புப் பணம் நிறைய வைத்திருப்போர்,  சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடனை அளித்து வருகின்றனர். அடுத்தச் சில மாதங்களில் இப்பிரச்சனை முழுமையாகக் குறைந்தபின் இந்த பணத்தைத் திரும்பப்பெறுவார்கள்.
ஜன்தன் வங்கி கணக்குகள்
இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை அளிக்கும் வண்ணம் மத்திய அரசு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் வாயிலாக இலவச வங்கிக் கணக்கு அமைத்துக்கொடுத்தது.
இதுவரை இந்தக்கணக்கில் அதிகளவிலான வரவு இல்லை. ஆனால் “செல்லாது” அறிவிப்புக்குப் பிறகு, இந்த கணக்கில் ஏகப்பட்டுபேர் பணம் போடுகிறார்கள்.
ஜன்தன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட 80 சதவீத கணக்குகள் மிகவும் குறைந்த வருமான உடையோர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்லாது அறிவிப்புக்குப் பிறகு இந்த வங்கிக் கணக்குகளில் குவியும் பணம் கறுப்பு பணமே. இவை சில காலத்துக்குப் பிறகு எடுக்கப்பட்டு உரியவர்களுக்கு (!) சென்றுவிடும். கணக்கில் போட்டு எடுத்தவர்களுக்கு கமிசனும் கிடைத்துவிடும்.
நோட்டு மாஃபியா
கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி, “செல்லாது” அறிவிப்பை வெளியிட்ட அந்த இரவிலேயே இந்தியாவில் பல இடங்களில் ரூபாய் நோட்டு மாஃபியா-க்கள் உருவாகிவிட்டனர்.
இவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்களுக்கு 15 முதல் 30 சதவீத கமிஷனை பெற்றுக்கொண்டு மீதமுள்ள தொகைக்கு 100 ரூபாய் நோட்டுகளை அளிக்கின்றனர். இவை அனைத்தும் கள்ள சந்தையில் நடப்பவைதான். இந்த மாஃபியாக்களில் பெரும்பாலோர்  ஏற்கெனெவே சட்டத்துக்குப் புறம்பான செயல்களை செய்துவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
ஊழியர்கள் மூலம்..
பெருமளவில் கறுப்புப்பணம் வைத்திருக்கும் தனியார் நிறுவன அதிபர்கள் பலர், தங்களின் ஊழியர்களுக்கு வங்கி கணக்கை துவங்கி 3 முதல் 8 மாதம் வரையிலான முன்கூடிய சம்பளத்தை அளிக்கின்றனர். இப்படி தரப்படும் பணம் அனைத்தும் 500, 1000 ரூபாய் நோட்கள் தான்.
இன்னும் சிலர், 2.5 லட்சத்திற்கும் குறைவான பணத்தை தங்களது ஊழியர் கணக்கில் போடச் செய்கிறார்கள். டெபிட் கார்டை தங்கள் வசம் வைத்துக்கொள்கிறார்கள்.
3
ரயில் டிக்கெட்
நவம்பர் 14ஆம் தேதி வரை இந்திய ரயில்வே துறை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றதால் அதிகளவிலான ரயில் முன்பதிவுகளைக் குவிந்தது. சில நாட்களுக்குப் பின் முன்பதிவு சீட்டை ரத்து செய்துவிட்டு சிறிய அளவிலான ரத்துக் கட்டணத்தை மட்டும் செலுத்திவிட்டு புதிய ரூபாய் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைப் பெறப் பலர் முயன்றார்கள். இதனால் இந்திய ரயில்வே துறை ரீபண்ட் தொகையைப் பணமாக அளிக்க முடியாது என அறிவிக்கும் நிலை ஏற்பட்டது.
ரத்துச் செய்யப்பட்ட பணம் உரிமையாளரின் வங்கி கணக்கில் வைப்பு வைக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்தது.
“சலவை” நிறுவனங்கள்
இந்த சலவை நிலையங்கள், துணியை வெளுக்க அல்ல.. பணத்தை!  கொல்கத்தாவில் ஜமா-கார்சி, மும்பையில் பட்-போடி என அழைக்கப்படும்  இந்த  சலவை நிறுவனங்களை நடத்துவது சார்ட்டர்ட் அக்கவுண்டண்கள். இவை, குறுகிய காலத்திற்கு அதிக நிதி தேவை இருக்கும் துறைகளில் வாயிலாக அதிகளவிலான கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவுகிறது.
4
தங்கம்
“செல்லாது” அறிவிப்பால் இந்தியாவில் தங்கம் விற்பனை உச்சத்தை அடைந்தது. பல நகைக்கடை உரிமையாளர்கள் தங்கத்தைப் பின் தேதியில் பெற்றதாகக் கணக்கு காட்டி அதிகளவிலான தங்க நகை, தங்க பிஸ்கட்களை விற்பனை செய்துள்ளனர். பின் தேதியிட்ட பில் மூலம் வாங்குபவர்களிடம் கணிசமான கமிஷனை பெறுகிறது நகை கடைகள். இத்தகைய பரிமாற்றத்தால் 15 முதல் 20 சதவீத கமிஷன் நகை கடை உரிமையாளர்களுக்குக் கமிஷன் பெறுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் பில்கள்  இல்லாமல் சந்தை விலைக்கும் அதிகமான தொகையைக் கொடுத்துத் தங்கத்தை வாங்கப் பல கறுப்புப் பண முதலைகள் செயல்படுகிறது. இந்தப் பரிமாற்றத்தால் 40 சதவீத வரை கமிஷன் நகை கடை உரிமையாளர்கள் லாபம் கிடைக்கிறது.
விவசாயம்
விவசாயத்தின் மூலம் எவ்வளவு வருமானம் லாபம் வந்தாலும் அதற்கு வரி இல்லை. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திப் விவசாயிகள் மூலம் கறுப்பு பணம் வைத்திருப்போர்,  தங்களது கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுகின்றனர். இதனால் இந்த வருடம் விவசாயிகளின் வருமான அளவில் மிகப்பெரிய உயர்வை இந்தியா பார்க்போகிறது.
பாலிடிக்ஸ் பாலிடிக்ஸ்
இந்திய சட்ட அமைப்பின் படி அரசியல் கட்சிகள் 20,000 மற்றும் அதற்குக் குறைவாகப் பெறப்படும் நன்கொடைக்கு யார் அளித்தார் என்ற விபரங்களை அளிக்கத் தேவையில்லை. இதனால் பல அரசியல் கட்சிகள் நன்கொடையின் வாயிலாகப் பல கறுப்புப் பணக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப் பெறப்படும் தொகையை டிசம்பர் 30ஆம் தேதிக்குப் பின் வெள்ளையாக மாற்ற முடியும்.
வங்கியின் பெரும் முதலீடு
கறுப்பு பணம் வைத்திருப்போர், தங்கள் வருமான அறிக்கைக்கு முற்றிலும் பொருந்தாத வகையில் வங்கியிலோ, நிதி நிறுவனங்களிலோ டெப்பாசிட் செய்தால் 33 சதவீத வரி மட்டும் அல்லாமல் வரி மீதான 200 சதவீத அபராதம் விதிக்கப்படும். ஆனால் வருமான அறிக்கையில் ‘other sources’ என்பதன் கீழ் எவ்வளவு தொகையைக் கணக்குக் காட்டினாலும் அதற்கு 33 சதவீத வரியை மட்டும் செலுத்தினால் போதும். இந்தப் பிரச்சனையை மத்திய அரசு எப்படிக் களைய போகிறது என்று 2017ஆம் ஆண்டுதான் தெரியும்.
கறுப்பு ‘பணம்’ மட்டும் தானா..?
இந்திய மக்கள் மத்தியில் கறுப்புப் பணம் வெறும் பணமாக மட்டும் இல்லை. ரியல் எஸ்டேட், தங்கம், வெள்ளி, பன்னாடு நாணயங்கள், வெளிநாட்டு வங்கிகளில் வைப்பு, பினாமி கணக்குகள், பங்குச் சந்தை முதலீடு எனப் பல விதங்களில் இருக்கிறது. இதில் பணமாக இருப்பது வெறும் 6 சதவீதம் மட்டுமே என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆக கறுப்பை வெள்ளையாக்க இத்தனை வழிகள் இருக்கின்றன. இதெல்லாம் மோடி அரசாங்கத்துக்குத் தெரியுமோ இல்லையோ பாவம் என்று கிண்டலாக சொல்கிறார்கள்  பொருளாதார வல்லுனர்கள்.
 டெய்ல்பீஸ்: குஜராத்.. நல்ல குஜராத்!
இந்தியாவில் கறுப்புப் பணத்தை எப்படி வெள்ளையாக மாற்றுவது என்று கூகுளில் தேடியவர்களில் அதிகமானோர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்கின்றன ஆய்வுகள்.
 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article