யூரோ கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து – இத்தாலி அணிகளுக்கு இடையிலானப் போட்டி வரும் ஞாயிறன்று இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியைக் காண இத்தாலியில் இருந்து இங்கிலாந்து வருவதற்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிரிட்டிஷ் அரசு வெளிநாடுகளில் இருந்து லண்டன் வருபவர்கள், 10 நாட்கள் தனிமைப் படுத்தலுக்குப் பின்பே இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதி அமலில் உள்ளது.

க்ராண்ட் ஷாப்ஸ்

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டிஷ் போக்குவரத்துத் துறை அமைச்சர் க்ராண்ட் ஷாப்ஸ், இறுதி போட்டியைக் காண்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இங்கிலாந்துக்கு வரத் துடிக்கும் ரசிகர்கள் யாரும் இங்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில், இங்கிலாந்து ரசிகர்கள் இந்த போட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தேர்வாகி இருப்பதால், அங்குள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டான சதர்ன் கோ-ஆப்பிரேடிவ் ஸ்டோர்ஸ், நாடு முழுவதும் உள்ள தனது நூற்றுக்கணக்கான கடைகளை மாலையில் சீக்கிரம் மூட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

தங்கள் கடை ஊழியர்கள் கால்பந்தாட்டத்தை காணும் வகையில் இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது, மேலும் பல்வேறு நிறுவனங்களும் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு இங்கிலாந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.