டகநாதசுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டம், திருவேடகம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

பாண்டியநாட்டை கூன்பாண்டியன் என்னும் மன்னன் ஆட்சிசெய்தபோது திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது, சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டனர். ஒரு தேசத்தில் அராஜகம் நடக்கிறது என்றால், அதன் பலனை அரசனே அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சம்பந்தர், “அந்தத் தீ அரசனையே சாரட்டும்” என்று சொல்லி பாடினார். உடனே, கூன்பாண்டியனை தீயின் வெப்பம் வெப்புநோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான்.

அவன் சார்ந்திருந்த சமணமதத் துறவிகளால் அதைச் சரி செய்ய முடியவில்லை. தன் வெப்பு நோயைத் தீர்க்க, அவன் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்தான். கருணை மனம் கொண்ட ஞானசம்பந்தர் “மந்திரமாவது நீறு” என்ற பதிகம் பாடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளி சாம்பலை அவனுக்கு பூசியதும், நோய் நீங்கியது. இதையடுத்து மன்னனின் மனம் சைவத்தை நோக்கிச் சென்றது.

இதைத் தடுக்க நினைத்த சமணர்கள், சம்பந்தர் செய்தது சித்துவேலை என்றும், தாங்கள் அறிவிக்கும் போட்டியில் சம்பந்தர் வெற்றி பெற்றால், மதுரையை விட்டே போய்விடுவதாகவும் அறிவித்தனர். அதாவது, “அத்திநாத்தி” என்று எழுதிய ஏட்டினை சமணர்களும்,”வாழ்க அந்தணர்” என்று எழுதிய பதிக ஏட்டினை ஞானசம்பந்தரும் வைகையாற்றில் விட வேண்டும். எந்த ஏடு வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்படாமல் கரை ஒதுங்குகிறதோ அவரே வென்றவராவர் என முடிவு செய்யப்பட்டது.