கிருஷ்ணகிரி:

னுமதி பெறாமல் எருதுவிடும் விழா நடத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், எச்சரிக்கையை மீறி எருதுவிழா நடத்தியவர்களை கலைக்க காவல்துறை தடியடி நடத்தியது.

இதன் காரணமாக ஆவேசம் அடைந்த பொதுமக்கள் காவல்துறையினர்மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

பொங்கல் திருநாளை மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா, ரேக்ளா போன்ற வீர விளையாட்டுக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், உச்சநீதி மன்றம் மற்றும் விலங்குகள் நல வாரியம் போன்றவை எதிர்ப்பு காரணமாக அனுமதி பெற்றே விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்  சில நாட்களுக்கு முன்பு ஆர்டிஓ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழர் வீர விளையாட்டு முன்னேற்ற நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அப்போது பேசிய ஆர்.டி.ஓ. விழா நடத்துவதற்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால், கலெக்டரிடம் மனு அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருதுவிடும் விழா ஆகிய நிகழ்ச்சிகளை, அரசிதழில் அறிவிக்கப்பட்ட கிராமங்களை தவிர வேறெங்கும் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும்  மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், விழா நடத்த ஏற்பாடு செய்வோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், அரசின் எச்சரிக்கையும் மீறி கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் உள்ள வேப்பன ஹள்ளி அருகே அந்த பகுதி மக்கள் இன்ற  எருது விடும் திருவிழாவை நடத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, எருதுவிடும் விழா நடத்த தடை போட்டனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீசார்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி பொதுமக்களை விரட்டியடித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.