சென்னை:

த்திய அரசு இன்று பாராளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்துள்ள 10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்த்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று  தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று  கேள்வி நேரம் முடிந்ததும் இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து பேசினார்.

அப்போது,  முன்னேறிய சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு பாராளுமன்ற கூட்டத்திலேயே இந்த சட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக தெரிய வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதி கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இதை நிறைவேற்றினால் பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்கு எதிராக அது அமையும்.

தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கலைஞர் பெற்றார். வேலைவாய்ப்பு மட்டுமின்றி கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெறப்பட்டது.

மண்டல் கமி‌ஷன் பரிந்துரையின்படி அமைந்த இந்த இடஒதுக்கீட்டின் மூலம் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பயன் பெற்றார்கள்.

பின்னர் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையை 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ரத்து செய்தது. அந்த நீதிபதிகளில் ஒருவரான ரத்தினவேல் பாண்டியன் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் 69 சதவிகித இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். தமிழ்நாடு இதை அமல்படுத்துவதில் வெற்றி கண்ட மாநிலமாக இருக்கிறது.

பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் கட்டி காத்த சமூகநீதிக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடக்கூடாது. மத்திய அரசு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறது.

தமிழக அரசு இந்த இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்ப்பதுடன் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.