ஈரோடு:  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளது.  வேட்புமனுவுடன் வேட்பாளருடன் 4 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்  நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து,  அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில்,  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இதுவரை யாருடைய பெயரும் அறிவிக்கப்படவில்லை.  ஆனால், தேமுதிக, நாம் தமிழர், அமமுக கட்சிகளும் களமிறங்கி உள்ளன. இதனால், அங்கு 5முனை போட்டி நிலவி விருகிறது.

இந்த பரபரப்பான சூழலில்,  நாளை (31ந்தேதி)  வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி,  வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  வேட்பு மனு தாக்கல் நாளை (31-ந்தேதி) தொடங்கி வருகிற 7-ந்தேதி வரை நடக்கிறது.

வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை தவிர்த்து தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்பு மனுக்களை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மனு தாக்கலின் போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலே அரசியல் கட்சியினர் நிற்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தின் 4 புறமும் 100 மீட்டர் தூரத்துக்கு எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளது.

மேலும் வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், வேட்புமனுத் தாக்கலின்போது, கோஷம் போட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் தேர்தல் அலுவலகமான மாநகராட்சி அலவலகத்தை சுற்றி பல லத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.