சென்னை: கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டிய சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் சஸ்பெண்டு செய்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

`கோயிலுக்குள் சென்றால் கொன்றுவிடுவேன்’‘ என பட்டியலின இளைஞரை மிரட்டும் சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தொடர்பான வீடியோ வைரலாகியது.  இதையடுத்து திமுக தலைமை அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலைக்கிரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரவீன்குமார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவர் கடந்த 26.1. 2023 ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலின் கருவறை முன்பு நின்று கடவுளை வணங்கி உள்ளார்.

அப்போது அங்கு இருந்த வன்னியர் சமூக மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் இளைஞர் பிரவீன் வேறு வழியின்றி கோயிலில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனையடுத்து வன்னியர் சமூக மக்கள் திமுக வின் சேலம் ஒன்றிய செயலாளரும், தற்போதைய திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவரிடம் இது குறித்து புகார் அளித்தனர். இதனையத்து ஊராட்சி மன்ற தலைவர் பிரவீன் குமார் மற்றும் அவரது பெற்றோரை பஞ்சாயத்திற்கு வர சொல்லியிருக்கிறார். இந்நிலையில் திருமலைகிரி பெரிய மாரியம்மன் கோயில் முன் ஜனவரி 27 ம் தேதி வெள்ளியன்று காலை பஞ்சாயத்து கூடியது. அங்கு ஊர்பொதுமக்கள் உட்பட அனைவரும் இருந்தனர். அப்போது பிரவீன் மற்றும் அவரது பெற்றோரை மாணிக்கம் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கவும் முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசும் மாணிக்கம் “எங்களை பகைச்சிக்கிட்டா நீங்க தொழில் பண்ண முடியாது; இங்க இருக்க முடியாது; உங்கள அடித்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். அவர் மிரட்டி கொண்டிருக்கும்போதே இன்னொரு நபர்.. பிரவீன் கேட்டால், இந்தக்கோயில் 18 பட்டிக்கு சொந்தமானது என்று பேசுகிறான் என்றும் இவன் யாரோ சொல்லிக் கொடுக்கும் பேச்சை கேட்டு தான், இப்படி பேசுகிறான் என்றும் சொல்கிறார்” இந்த வீடியோவிற்கு மக்கள் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தனர். ஆனால், சேலம் இரும்பாலை காவல்துறை யினர், மிரட்டி திமுக நபர்மீது( நடவடிக்கை எடுக்காமர்ல இரு தரப்புக்கும் இடையே பஞ்சாயத்து பேசி வந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, தலைமையிலான குழுவினர், , “இந்த விவகாரம் தொடர்பாக மாநில காவல்துறையும், மாநில நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு திமுக ஒன்றியச் செயலாளரை எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வளவு கொடூரமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடிய, பட்டியலின மக்களுடைய வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மாணிக்கத்தை அந்த கிராமத்தை விட்டே சட்டப்படி வெளியேற்ற வேண்டும். ஓரிரு தினங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பெரிய மாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்லும். ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தும்” என்று எச்சரித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அவர்மீது நடவடிக்கை எடுப்பதாக  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி.மாணிக்கம், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார். பட்டியலின இளைஞர் கோயிலில் நுழைந்ததை மாணிக்கம் கண்டித்த வீடியோ வெளியான நிலையில், திமுக நடவடிக்கை எடுத்துள்ளது.