ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும்  ஈரோடு கிழக்கு தொகுதியில்  இன்று மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.  இதையொட்டி, அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 2024ம் ஆண்டு டிசம்பரில்  உயிரிழந்ததை அடுத்து  அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை மறுநாள் ( பிப்ரவரி 5-ம் தேதி)  வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது.   வாக்குகள் எண்ணிக்கை பிப்ரவரி 8ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்துள்ள நிலையில், திமுகவும், நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே களத்தில் உள்ளன. இதனால், இருமுனை போட்டி நிலவுகிறது.  தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 8-ம் தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூர் கட்சி நிர்வாகிகள் இன்று மாலைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.  அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.-வினரும், சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.