ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை முதல்  பூத் சிலிப்  விநியோகம் நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி கூறினார்.,

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, 238 வாக்குச்சாவடிகளும், கூடுதலாக (ரிசர்வ்) 48 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய மொத்தம் 1,206 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் உன்னி,  ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக ஒரு வாக்குச்சாவடிக்கு 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதையடுத்து, 1,430 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை சரிபார்க்கும் 310 விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை சோதனைகளுக்கு பிறகு தேர்தல் நடத்தும்அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நுண் பார்வையாளர்கள்: தொகுதியில், மொத்தம் உள்ள 238 வாக்குச்சாவடிகளில், 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க, 260 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, முதல்கட்ட பயிற்சி முடிந்த நிலையில், நேற்று இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 26-ம் தேதி நடக்க உள்ளது. வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  இதற்கென படிவம் வழங்கிய 321 முதியோர் மற்றும் 31 மாற்றுத் திறனாளிகளின் வாக்குகளை பதிவு செய்யும் பணி கடந்த16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பதிவு செய்த வாக்காளர்களின் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் தேர்தல் அலுவலர்கள்சென்று, வாக்குப்பதிவு மேற்கொண்டனர். இந்த 2 நாட்களிலும் வாக்களிக்காதவர்களுக்கு, வரும் 20-ம் தேதி மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்ட போலீஸாருடன் இணைந்து துணை ராணுவப்படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தொடர்பான விதி மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க ஈரோடு மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  வரும் 19-ம் தேதி முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தேர்தல் அலுவலர்கள் நேரடியாக ‘பூத் சிலிப்’ வழங்க உள்ளனர்.

‘பூத் சிலிப்’ விநியோகம்: வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’விநியோகம் குறித்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வாக்காளர் விவரம் அடங்கிய ‘பேலட் சீட்’ பொருத்தும் பணி 18-ம் தேதி (இன்று)காலை நடக்கிறது. வாக்காளர்களுக்கு 19-ம் தேதி (நாளை)முதல் 24-ம் தேதி வரை ‘பூத்சிலிப்’ வழங்கப்பட உள்ளது. இதற்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒருவர்என 238 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் 18-ம் தேதி ‘பூத் சிலிப்’ படிவங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, வாக்காளர்களை சரிபார்த்து, அலுவலர்கள் ‘பூத் சிலிப்’ வழங்குவார்கள். இதை பெற முடியாத வாக்காளர்களுக்கு, வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பூத் சிலிப் வழங்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.