சென்னை: ஈரோடு கிழக்கு தொகுடை இடைத்தேர்தலில்  அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார்.  மேலும் நாம் தமிழர் கட்சி, தேமுதிக, அமமுக கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.  அதிமுக கூட்டணி சார்பில்,  இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், இன்று காலை அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏவான கே.எஸ்.தென்னரசு, ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக உள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 27.02.2023 அனுறு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.எஸ்.தென்னரசு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.