சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக, ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்து உள்ளார்.
திருமகன் ஈவேரா மறைவைத்தொடர்ந்து, காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்தும், அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார்.
ஆனால், அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாகவும், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தியது.
இதைத்தாடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர், 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்று அறிவித்தால், உடனே ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பார் என்றும் கூறினார்.