டெல்லி:  அதிமுக பொதுக்குழு வழக்கில் ஜனவரி 24-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் உலா வருகின்றன. ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

SC

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, பொதுக்குழு கூட்டப்பட்ட, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஒற்றை தலைமை விவகாரம் எடப்பாடிக்கும் ஒபிஎஸ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கடந்த 2022ம் ஆண்டு கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு களேபரமானது. பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி,  ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்ட நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டார்.

இதை எதிர்த்து, அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதில் முதலில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வந்தது. ஆனால் அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் 2 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் இபிஎஸ்.,க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனால், தற்போதைய நிலையில், அதிமுகவின் அக்டிங் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கை   உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் அமர்வு விசாரித்து வந்தது. கடந்த  3 ஆம்  (ஜனவரி 2023) தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கில் விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையின்போது,  இதில் ஓபிஎஸ் தரப்பு, அவரது ஆதரவாளர் வைரமுத்து தரப்பி மற்றும் இபிஎஸ் தரப்பு என பலதரப்பு பல வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.  பின்னர் இரு தரப்பினரையும், ஜனவரி 16 ஆம் தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டதுடன், தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு  பதில் மனு தாக்கல் செய்த நிலையில், இபிஎஸ் தரப்பில் 39 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வழக்கில் இனி தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டும் என்ற நிலை உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், திருமகன் ஈவேரா காலமான தொகுதியான  ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில்  இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக போட்டியிடும் என அறிவித்து உள்ளது.  இதனால், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை முடக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்த சூழலில்  அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்பவே எழுந்துள்ளது.

ஏற்கனவே தேர்தல் ஆணையம், மத்திய சட்ட ஆணையம், எடப்பாடி தரப்பை அங்கீரித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் யாரை அங்கீகரிக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது-