சென்னை:
டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கும் விவகாரத்தில் எடப்பாடி அரசு பல தில்லுமுல்லுகளை செய்து வருகிறது. கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படாது என்று கூறியதோடு, மாநகர எல்லைப்பகுதியில் மேலும் 60 டாஸ்மாக் கடைகளை இன்று திறந்துள்ளது.
சென்னை குடி மகன்களின் தேவையையும், அரசின் வருமானத்தையும் பெருக்கும் வகையில், எடப்பாடி தலைமை யிலான அதிமுக அரசு கண்ணாமூச்சி ஆடி வருவதாக சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும்போதே தமிழகஅரசு டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது பல்வேறு சர்ச்சைகளையும், வழக்குகளையும் ஏற்படுத்தியது. ஆனால், விடாப்படியாக  உச்சநீதி மன்றம் வரை சென்று, கடைகளை திறக்க அனுமதி வாங்கி,  தமிழகத்தில், கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை உள்பட சில பகுதிகளை தவிரத்து மற்ற பகுதிகளில்   மதுபானக் கடைகளை தமிழகஅரசு திறந்து தினமும் 150 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டி வருகிறது.

தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 500 டோக்கனும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த இரண்டு நாளில், கடைகளை இரவு 7 மணி வரை திறக்க உத்தரவிட்டது டன், மேலும் 200 விற்பனை  டோக்கனையும் அதிகரித்தது.  சென்னையைத் தவிர்த்து பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விட்ட நிலையில்,  கொரோனா தீவிரம் காரணமாக சென்னை மாநகரப் பகுதிகளில் மட்டும் கடைகளை திறந்து கல்லா கட்ட முடியாத நிலை நீட்டித்து வருகிறது.
இதையடுத்து, சென்னை புறநகர் பகுதிகளில் கடைகளை திறந்து கல்லா கட்டி தீர்மானித்த தமிழகஅரசு, சென்னை செங்கல்பட்டு,சென்னை காஞ்சிபுரம், சென்னை திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் கடைகளை  திறந்துள்ளது.
இன்று  மேலும் சுமார் 60 கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  சென்னையில் இருந்து 50 கி.மீட்டர் பகுதிக்குள்ளேயே இந்த கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையின் குடி மகன்கள் அந்த கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள  60 மதுபான விற்பனை நிலையங்கள் மூலம்  டாஸ்மாக்கிற்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ .1 கோடி வருமானம் அதிகரிக்கும்” என்று ஒரு அதிகாரி  தெரிவித்து உள்ளார்.
ஒப்புக்கு சப்பானியாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று அறிவித்து விட்டு சென்னை எல்லைகளில்,  வருமானத்தை ஈட்டும்  வகையில் அதிக அளவிலான கடைகளை திறந்து மக்களிடையே கண்ணாமூச்சி ஆடி வருகிறது எடப்பாடி அரசு…