சென்னை,

சென்னை  எண்ணூர் துறைமுகம் அருகில் கச்சா எண்ணை பரவியதால் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக எண்ணை கப்பலில் இருந்து எண்ணை கொட்டி கடலில் கலந்து கடல் மாசு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த எண்ணையை அகற்றும்பணியில் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2004 டிசம்பர் 26 இல் எழுந்த ஆழிப்பேரலையாம் சுனாமி, சென்னை காசிமேட்டுக் கடற்கரையில் இருந்து கன்னியாகுமரி வரை கரையோர வீடுகளையும், மனைகளையும் உயிர்களையும் வாரிச்சுருட்டி விழுங்கிய அவலம் நேர்ந்தது.

சென்னையை அடுத்துள்ள காமராஜர் துறைமுகத்தில் கடந்த ஜனவரி 27  ஆம் தேதி இரவில் எரிவாயுவை இறக்கி விட்டு வெளியேறிய ஈரான் நாட்டுக் கப்பல், மும்பையில் இருந்து டீசல் ஏற்றிக் கொண்டு எண்ணூர் நோக்கி வந்து கொண்டு இருந்த டான் காஞ்சீபுரம் என்ற கப்பல் மீது மோதியது.  அதனால் பலத்த சேதம் அடைந்த டான் காஞ்சீபுரம் கப்பலில் இருந்து கொட்டிய கச்சா டீசல், சென்னையை ஒட்டிய கடற்பரப்பு முழுமையும் கலந்து  மிதந்துகொண்டு இருக்கின்றது.  குறிப்பாக, தாழ்வான பகுதியான திருவொற்றியூர் பாரதியார் நகர் அருகே அதிகப்படியான டீசல் படிந்து இருக்கின்றது.

கடல் அள்ளித் தரும் மீன் வளத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்ற மீனவர்கள், கடலைத் தங்கள் தாய்மடியாகப் போற்றுகின்றனர்.

சூறைக் காற்றுக்கும் சுறா மீனுக்கும் அஞ்சாமல் கடலில் படகுகளைச் செலுத்தி வலைகளை வீசி மீன்பிடிக்கும் மீனவர்களின் அன்றாட வாழ்க்கை அலைகடலில் போராட்டம்தான்.

நாகப்பட்டினம் இராமேஷ்வரம் வேதாரண்யம் தூத்துக்குடி வரை, தமிழக மீனவர்கள்   சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், படகுகள் அழிக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும், இலங்கைச் சிறையில் அடைக்கப்படுவதும் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டதால், தமிழக மீனவர்கள் நாதி அற்றவர்களா? இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? என்ற கேள்வி எழுந்து விட்டது.

இவை எல்லாம் போதாது என்று, கடலில் கலந்த கச்சா எண்ணெய்ப் படலம், சென்னைக் கடற்கரை மீனவ மக்களின் வாழ்க்கையைச் சூறையாடி விட்டது.  ஆழக்கடல் வரை சென்று அள்ளி வந்த மீன்களில் கூட விஷம் கலந்திருக்கும் என்று கருதி மக்கள் புறக்கணிப்பதால் மீனவர்கள் வருவாய் இன்றித் தவிக்கின்றனர்.

இந்த எண்ணெய்ப் படலம், நீண்ட காலத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.

ஜல்லிக்கட்டுத் தடையை உடைக்க, மெரினா கடற்கரையில் இலட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் குவிந்து அறப்போர் நடத்தி, தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை வெளிச்சத்தைத் தந்தனர்.

அதுபோல, கடலில் கலந்துள்ள எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் அரசுத்துறை மட்டும் அன்றி, பொதுநல அமைப்புகள்,  இளைஞர்கள், மாணவர்கள், ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள்,  கழுத்து வரை கச்சா எண்ணெய்ச் சேறு படிய, அர்ப்பணித்துப் பாடுபடுவது மெச்சத்தக்கது ஆகும்.

எண்னூர் கூட்டுறவு சங்கத் தலைவர் வெங்கடேசன், காமராசர் துறைமுக அதிகாரிகளுக்கு   உடன் இருந்து உதவினார்; ஏராளமான மீனவர்களோடு இணைந்து பணியாற்றி உள்ளார்.

தங்கள் உடல் நலத்திற்குக் கேடு நேருமே என்று கவலைப்படாமல் இத்தகையோர் ஆற்றிய சேவை பாராட்டுக்கு உரியது. அவர்களுக்குத் தக்க பாதுகாப்புக் கருவிகளைத் தர வேண்டும் என வலியுறுத்துகின்றேன். அத்துடன், எண்ணெய்க் கழிவை எப்படி அகற்றுவது என்பது குறித்து, வல்லுநர்கள் உடன் இருந்து வழிகாட்ட வேண்டும்.

கச்சா எண்ணெயில் கலந்துள்ள வேதிப் பொருட்கள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. அதனால், சென்னைக் கடல் பரப்பில்  எதிர்காலத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு  உரிய பாது காப்பு நடவடிக்கைகளை, மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்வ துடன், இதனால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.