சென்ன‍ை: முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் கெத்து காட்டிய இங்கிலாந்தை, தற்போது பாடாய் படுத்திவருகிறது சேப்பாக்கம் பிட்ச்.

முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், பந்துவீச்சிற்கு சுத்தமாக ஒத்துழைக்காத தட்டையான மற்றும் மொக்கையான பிட்சில் வீரம் காட்டினர் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள். ஜோ ரூட் இரட்டை சதமெல்லாம் அடித்தார்.

ஆனால், அந்த டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலேயே இங்கிலாந்து பேட்டிங் பல் இளித்தது. 178 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

தற்போது, கடினமாக மாற்றப்பட்டுள்ள சேப்பாக்கம் பிட்சில், இந்திய அணியின் சில பேட்ஸ்மென்கள் சவாலாக ஆடி, 329 ரன்களைக் குவித்துள்ளனர். ஆனால், பதிலுக்கு தற்போது பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து, தொடக்கம் முதலே திணறி வருகிறது.

ரன் கணக்கைத் துவக்குவதற்கு முன்னதாகவே 1 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. பர்ன்ஸ் டக்அவுட், டாம் சிப்லி 16 ரன்கள், டான் லாரன்ஸ் 9 ரன்கள், ஜோ ரூட் வெறும் 6 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 18 ரன்கள் என்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து கழன்று வருகின்றன.

அஸ்வினுக்கு மட்டுமே இதுவரை 3 விக்கெட்டுகள் கிடைத்துள்ளன. அக்ஸார் படேல் மற்றும் இஷாந்த் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

தற்போதைய நிலையில், இங்கிலாந்து 64 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.