ஜெருசலேம்

ங்கிலாந்து, பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்  இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

இன்று காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ் கிளவெர்லி வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேல் மக்கள் மீது ஹமாஸ் நடத்தும் கொடூரமான தாக்குதல்களை இங்கிலாந்து வண்மையாகக் கண்டிக்கிறது. தங்களை பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை இங்கிலாந்து எப்போதும் ஆதரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மக்கள் மீதான இந்த தாக்குதல், ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும், இஸ்ரேல் மற்றும் அதன் மக்களுடன் பிரான்ஸ் அரசு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி அனாலேனா பேர்பாக், காசா நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.