பாலஸ்தீன இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

அல் அக்சா மசூதிக்குள் புகுந்து பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படையினர் சமீபத்தில் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதலை ஹமாஸ் தொடுத்துள்ளதை அடுத்து இதற்கு ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ (‘Operation Al Aqsa Flood’) என்று பெயரிட்டுள்ளது.

காசா எல்லையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்களை தகர்த்தெரிந்து இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும் 500 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் மீதான இந்த தாக்குதல் எங்கள் மீது தொடுக்கப்பட்ட போர் என்று கூறியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பை வேரோடு அழிப்போம் என்று போர் பிரகடனம் செய்துள்ளார்.

இதனையடுத்து இஸ்ரேலிய ராணுவப்படை மேற்கொண்ட தாக்குதலில் 160 பாலஸ்தீனர்கள் பலியானதாகவும் 930 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்தோருக்கு தேவையான ரத்தம் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான இந்த மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் மீதான தொடர் தாக்குதலை சமாளிக்க லெபனானில் இருந்து இயங்கி வரும் பாலஸ்தீனிய தீவிரவாத அமைப்பு உள்ளிட்ட பல்வேறு குழுக்களுக்கு ஹமாஸ் அழைப்புவிடுத்துள்ளது.

உலகின் அதிநவீன ராணுவம் மற்றும் Iron Dome உள்ளிட்ட ராணுவ தளவாடங்களைக் கொண்ட இஸ்ரேல் மீதான இந்த தாக்குதல் குறித்து இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது. இதனால் இஸ்ரேலில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க அறிவுருத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள தமிழர்களுக்கு உதவ தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

தமிழர்கள் +918760248625, +919940256444, +919600023645 ஆகிய எண்ணில் உதவிக்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.