புனே: இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

337 ரன்களை, வெறும் 43.3 ஓவர்களிலேயே எடுத்து மிரள வைத்துள்ளது இங்கிலாந்து அணி.

இந்திய அணி நிர்ணயித்த பெரிய இலக்கை எட்ட முடியாமல், இங்கிலாந்து அணி இன்று தோல்வியடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று நடந்ததோ வேறு. அந்த அணியின் முதல் மூன்று பேட்ஸ்மென்களே ஆட்டத்தை முடித்து விட்டனர்.

துவக்க வீரர் ஜேஸன் ராய் 52 பந்துகளில் 55 ரன்களை அடிக்க, பேர்ஸ்டோ 112 பந்துகளில் 124 ரன்களை அடித்தார். அதில் 7 சிக்ஸர்கள் & 11 பவுண்டரிகள் அடக்கம்.

அதற்கடுத்து பென் ஸ்டோக்ஸ் ஆடியதுதான் மரண ஆட்டம். 52 பந்துகளை சந்தித்த அவர், 10 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 99 ரன்களை அடித்து, வெற்றியை உறுதிசெய்துவிட்டார். வெறும் 1 ரன்னில் அவர் சதத்தை தவறவிட்டார்.

இங்கிலாந்து அணி, 43.3 ஓவர்களிலேயே 337 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய அணியின் பந்துவீச்சு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

வழக்கபோல் குல்தீப் யாதவ் மோசமாக பந்துவீசினார். 10 ஓவர்களில் 84 ரன்களைக் கொடுத்த அவர் ஒரு விக்கெட்கூட சாய்க்கவில்லை. அதைவிட 6 ஓவர்கள் வீசிய கருணால் பாண்ட்யா, 72 ரன்களை வாரியிறைத்தார். அவருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை. பிரசித் கிருஷ்ணா மட்டுமே 10 ஓவர்களில் 58 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தற்போதைய நிலையில், 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.