நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
சாதாரண சினிமாதான்.. ஆனால் வித்தியாசமான வரலாறு..
அது ஒரு ‘எங்கள் தங்க’ காலம்..
சில தினங்களுக்கு முன்புதான் சன் லைப் சேனலில் எங்கள் தங்கம் படத்தை ஒளிபரப்பினார்கள்.
பணத்தின் வரலாறு தெரியாமல் அதில் பணியாற்றிய கலைஞர்களின் பெயர்களை கூட காட்ட துப்பில்லாமல் முக்கால் பகுதியை வெட்டி எறிந்திருந்தார்கள். முக்கியமான பாடல் காட்சிகள் எல்லாம் பல இடங்களில் கடித்து குதறப்பட்டிருந்தன.. சுருக்கமாக சொன்னால் நாய்க்குத் தெரியுமா நல்ல வெங்காயத்தோட ருசி என்பார்கள் அது போலத்தான்..
சரி மேட்டருக்கு வருவோம்..
தமிழ் பட உலகில் முன்னணி ஜோடிகளாக கொடிகட்டி பறந்த காலத்தில், எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம், எங்கள் தங்கம்.
காஞ்சித்தலைவன் படம் நடித்த பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து கலைஞர் குடும்பத்திற்காக எம்ஜிஆர் செய்த படம்.. இருவர் காம்பினேஷனில் முதல் கலர் படமும்,கடைசி படமும் கூட..
பாடல்களில் வாலியும் இசையில் எம்எஸ் விஸ்வநாதனும் கதகளி ஆடி இருப்பார்கள்..
தங்கப் பதக்கத்தின் மேலே..
நான் செத்துப் பொழச்சவன்டா..
ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான்..
என ஹிட் பாடல்கள் அடுத்தடுத்து வந்தபடியே இருக்கும். படத்தில் பத்து நிமிடங்களுக்கும் மேலாக ஒரு கதாகாலட்சேபம் வரும். மொட்டைத்தலை குடுமியுடன் எம்ஜிஆர் காலட்சேபம் செய்து ஜமாய்ப்பார்.
மெட்ராஸ் மாகாணம் பெயர் மாற்றம், மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு, அரசு அதிகாரிகளின் மூளைகெட்டத்தனம் மகாராஷ்டிரா சிவசேனாவின் அரசியல் என அரசியல் சமாச்சாரங்களை தனது பாடலில் வாலி கலந்து கட்டி அடித்து நொறுக்கி இருப்பார்..
தத்துவ பாடலோ ரொமான்டிக் பாடலோ, அரசியல் வரி இல்லாமல் இந்த படத்தில் இருக்கவே இருக்காது.
ஜெயலலிதா கனவு காணும் ரொமான்டிக் பாடலில் கூட ,”கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்தாளு” எனப்பாடி, தான் அக்மார்க் திமுக காரன் என்பதை எம்ஜிஆர் சொல்வார்..
“ஓடும் ரயிலை இடைமறித்து அதன் பாதையில் தனது தலை வைத்து உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது..”
திமுக நடத்திய ரயில் மறியல் போராட்டத்தை, “நான் செத்துப் பிழைச்சவன்டா..” பாடலில் இப்படி அருமையாக கொண்டு வந்திருப்பார் வாலி..
அப்போது அமைச்சர் பதவிக்கு இணையான சிறுசேமிப்புத் துறை தலைவர் பதவியில் எம்ஜிஆர் இருந்தார்.. சிறு சேமிப்பை ஊக்குவிப்பது போல் படத்தில் காட்சிகள் வைத்து நிஜ எம்ஜிஆரும் திரையில் வருவார். அவருடன் முதலமைச்சர் கருணாநிதி நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் மற்றும் தமிழக அமைச்சர்களும் காட்சியில் தோன்றுவார்கள்.
படத்தில் ஜெயலலிதாவை பார்த்து எம்ஜிஆர் பாடும் “”நான் அளவோடு ரசிப்பவன்.. ” என்று முதல் வரியை வாலி எழுத,” எதையும் அளவின்றி கொடுப்பவன்” என்று அடுத்த வரியை கலைஞர் எடுத்து கொடுத்தார்.
படப்பிடிப்பு தொடங்கிய போது உயிரோடு இருந்த முதல் அமைச்சர் அண்ணா, படம் வெளியாகும்போது உயிரோடு இல்லை. படத்தில் அவருடைய சவ ஊர்வல காட்சிகள் காட்டப்பட்டன.
திமுகவில் எம்ஜிஆர் பின்னிப்பிணைந்து கலைஞர் குடும்பத்துடன் உச்சகட்ட பாசத்துடன் ஒட்டி உறவாடிய காலகட்டம் என்பதால் இவ்வளவு விஷயங்கள் படத்தில் இடம் பெற்றன..
எங்கள் தங்கம் படம் வெளியாகி அமோகமாய் வெற்றி கண்டது. படத்தயாரிப்பாளர் முரசொலி மாறனுக்கு லாபத்தை பெருமளவில் வாரிக்கொடுத்தது.
அதன் வெற்றி விழா 1971 ஜனவரி 17-ம் தேதி அதாவது மக்கள் திலகத்தின் பிறந்தநாள் அன்று, சென்னையில் நடந்தது.. அதில் கலந்து கொண்ட முரசொலிமாறன், படத்தயாரிப்பாளர் என்ற முறையில் என்ன பேசினார் தெரியுமா?
“முரசொலி பத்திரிகை நஷ்டத்தில் நடைபெற்ற காரணத்தாலும் தொடர்ந்து எங்களது திரைப்படங்கள் வெற்றி பெறாத காரணத்தாலும் எங்களது குடும்பம் கடன்கார குடும்பமாக மாறிவிட்டது. வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. இந்த நிலைமையை புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்களிடம் சொன்னேன். எம்ஜிஆர் அவர்களும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் எங்கள் தங்கம் படத்திற்கு பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்து நடித்துக் கொடுத்தது மட்டுமன்றி படத்தை வெற்றிப்படமாகவும் ஆக்கித் தந்தனர்.
இந்த படத்தின் மூலம் வந்த லாபத்தில், அடமானத்தில் இருந்த எங்கள் சொத்துக்கள் மட்டுமின்றி எங்களது மானத்தையும் மீட்டுத் தந்தவர் புரட்சி நடிகரும் கலைச்செல்வியும். அவர்களுக்கு எங்களது குடும்பம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது” என்று பேசினார் முரசொலிமாறன்.
தொடர்ந்து விழாவில் பேசிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, “கொடுத்து கொடுத்து சிவந்த, கர்ணன் என்று சொல்வார்கள். ஆனால் எங்கள் திராவிட கர்ணன் புரட்சி நடிகருக்கு, கொடுத்து கொடுத்து மேனியே சிவந்துவிட்டது. கொடுத்து கொடுத்து சிவந்த கரமுள்ள புரட்சி நடிகர் வாழ்வதால்தான் அவர் வாழும் மாவட்டத்திற்கு ‘செங்கை மாவட்டம்’ என்று பெயர் வந்தது. நன்றி மறப்பது நன்றன்று என்று வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, மாறனின் நன்றி உணர்ச்சியை நானும் வழிமொழிகிறேன்..” இப்படி பேசி முடித்தார் கலைஞர்.
எங்கள் தங்கம், சாதாரண ஒரு சினிமா என்றாலும், அது தொடர்பான வரலாறு மிகவும் ஆச்சரியமானவை.. சரியாக 51 ஆண்டுகளுக்கு முன்பு 1970 அக்டோபர் 9 ஆம் தேதி அதாவது இதே நாளில் தான் எங்கள் தங்கம் படம் வெளியானது..
51 ஆண்டுகளுக்குள் தமிழக அரசியல் களத்தில் எவ்வளவு பெரிய மாற்றங்கள்..
படம் வந்த இரண்டே ஆண்டில் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
எம்ஜிஆருடன் மனஸ்தாபம் கொண்டு ஜெயலலிதா விலகிப்போனார்.
எம்ஜிஆர் தனிக்கட்சி கண்டு கலைஞரை மூன்று முறை சட்டமன்ற பொதுத் தேர்தலில் தோற்கடித்து மாநிலத்தின் முதலமைச்சராக 11 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தார்..
மனஸ்தாபம் தீர்ந்து பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த ஜெயலலிதா, எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறக அதிமுகவை வழிநடத்தி அவரும் முதலமைச்சராக தொடர்ந்தார்.
அரசியலில் பிரிந்து பரம எதிரிகளாக மோதிக்கொண்ட எம்ஜிஆர், முரசொலி மாறன், ஜெயலலிதா கலைஞர் ஆகிய நான்கு பேருமே இன்று உயிரோடு இல்லை.
நால்வர் மட்டும் அல்ல, எங்கள் தங்கம் படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு இசையமைப்பாளர் எம்எஸ்வி பாடலாசிரியர் வாலி, அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, மனோரமா, தேங்காய் சீனிவாசன் என ஒரு பெரும்படையே காலமானோர் லிஸ்டில் போய் சேர்ந்துவிட்டது.