அமலாக்கத்துறை அதிகாரி திவாரிக்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரிலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், நவ.1ல் நத்தம் அருகே சாலையில் இருந்த அதிகாரியின் காரில் பணத்தை வைத்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறை தனது எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இருந்து விடுவிக்க 3 கோடி ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளார்.

அவ்வளவு தொகை தன்னிடத்தில் இல்லை என்று கூறியதை அடுத்து பேரம் பேசிய அங்கித் திவாரி இந்த பணத்தில் உயரதிகாரிகளுக்கும் பங்கு தரவேண்டியுள்ளது என்று கூறிய அவர் பணம் கொடுத்தால் தான் வழக்கில் இருந்து தப்ப முடியும் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து 51 லட்சம் ரூபாய் லஞ்சம் தருவதாக ஒத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து முதல் தவணையாக 20 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

மீதி 31 லட்சம் ரூபாய் கொடுப்பதில் தாமதமான நிலையில் அங்கித் திவாரி அழுத்தம் கொடுத்ததை அடுத்து இரண்டாவது தவணையாக 20 லட்சம் ரூபாய் தருவதற்கு ஒப்புக் கொண்ட சுரேஷ் பாபு பணத்தைப் பெற்றுக்கொள்ள அங்கித் திவாரியை தான் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

பணத்தைப் பெற்றுக்கொண்டு தனது காரில் ஏறி தப்ப முயன்ற அங்கித் திவாரியை தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

மருத்துவர் சுரேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அமலாக்கத்துறை அதிகாரி திவாரிக்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரிலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், நவ.1ல் நத்தம் அருகே சாலையில் இருந்த அதிகாரியின் காரில் பணத்தை வைத்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.