சென்னை

சிகலாவிடம் சொத்து மற்றும் வருமான வரி விவரங்கள் கேட்டு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது,

வருமானத்துக்கு மீறி சொத்து வாங்கியதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மற்றும் அவர் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.  இதில் அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.  இதற்கான தண்டனை அளிக்கப்படும் முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்ததால் சசிகலா உள்ளிட்டோருக்கு மட்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளதால் அவர் தற்போது சென்னைக்கு திரும்பி வரவில்லை.   அவர் திரும்பி சென்னை வரும் தேதியும் இதுவரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த வருடம் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.  அப்போது பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் பல சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இந்த சொத்துக்களை வாங்கிய விவரம் குறித்தும் இது தொடர்பான வருமான வரி தகவல்கள் குறித்தும் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை ஏற்கனவே சசிகலாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் அதற்கு சசிகலா இதுவரை பதில் அளிக்கவில்லை. எனவே அவருக்கு மீண்டும் அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது.