தென்காசி: என் மண் என் மக்கள் என்ற பெயரில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்  மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுவரும் நடைபயணத்தின்  2-ம் கட்ட நடை பயணம் இன்று தென்காசி மாவட்டம்  ஆலங்குளத்தில் தொடங்குகிறது.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்களிடையே ஆதரவு திரட்டும் வகையில், மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற ஸ்லோக்கத்தை முன்னிறுத்தி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார்.  இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கான பணிகளை பா.ஜனதா மூத்த தலைவர்கள் மேற்பார்வையில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவை திரட்டும் வகையில், கடந்த 9 ஆண்டுகால  மோடி ஆட்சியில் செய்துள்ள சாதனைகள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் முதல்கட்ட யாத்திரை,  கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அண்ணாமலை தனது பாதயாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து,   ராமநாதபுரம், சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், திருமயம் வழியாக கடந்த ஆகஸ்ட் 3-ந்தேதி காரைக்குடி சென்றார். பின்னர் மதுரை மாவட்டத்தில் கடந்த மாதம் 4, 5-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 13-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொண்டார். இதையடுத்து கன்னியாகுமரி சென்ற அவர் அங்கு நடைபயணத்தை முடித்த பின்னர் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு வந்தார். கடந்த 19-ந்தேதி பாளையில் நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து 22-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபயணம் சென்றார். நெல்லை டவுனில் கடந்த 22-ந்தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை தனது முதல் கட்ட யாத்திரையை நிறைவு செய்தார்.

அண்ணாமலையின் முதற்கட்ட நடைபயணம் மொத்தம் 22 நாட்கள் நடைபெற்ற நிலையில்,  178 கிலோமீட்டர் நடந்துள்ளார்.  இந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின்  7 பாராளுமன்ற தொகுதிகளைச் சேர்ந்த  41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்ததுடன், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டங்களிலும் பேசியுள்ளார்.

இதையடுத்து கடந்த 10 நாட்களாக ஓய்வெடுத்து வரும் அண்ணாமலை, தனது 2வது கட்ட யாத்திரையை இன்று மாலை தொடங்குகிறார்.  இன்று மாலை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தனது நடை பயணத்தை மீண்டும், தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி சென்றுள்ள அண்ணாமலை அங்கிருந்து கார் மூலம்  நெல்லைக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கிருந்து தென்காசி செல்லும் அண்ணாமலை, இன்று  மாலை 3 மணிக்கு பொட்டல்புதூரில் தொடங்கி 5 மணிக்கு கடையம் பஸ் நிலையத்தில் நடைபயணத்தை முடிக்கிறார். தொடர்ந்து தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூரில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, தென்காசி புதிய பஸ் நிலையத்திற்கு இரவு 8 மணிக்கு வந்தடைகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கடையநல்லூரில் தொடங்கி கிருஷ்ணாபுரம் வரை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியங்குடி எலுமிச்சை சந்தையில் தொடங்கி சிந்தாமணி வரையிலும் நடைபயணம் மேற்கொள்கிறார்.

அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணம் தொடங்கியிருப்பதையொட்டி தென்காசி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.