உலகின் முன்னணி பணக்காரரும் முக்கிய நிறுவனங்களின் நிறுவனருமான எலோன் மஸ்க் தனது உடல் எடையை குறைப்பதற்காக உண்ணாவிரதம் இருப்பதாக கூறியிருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிரீஸ் சென்ற எலோன் மஸ்க் நீச்சல் குளத்தில் இருந்து சட்டையில்லாமல் வந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.

இந்த படத்தைப் பார்த்து எலோன் மஸ்கின் உடல் எடை குறித்து கேலி செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மஸ்க் என் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் கூறியதால் உடல் எடையைக் குறைக்க சீரான இடைவெளியில் உண்ணாவிரதம் இருப்பதாகவும், இப்போது ஆரோக்கியமாக உணர்வதாகவும் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து அவரிடம் இதனால் எத்தனை கிலோ குறைந்துள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 9 கிலோ எடை குறைந்துள்ளதாக பதிவிட்டிருக்கிறார்.

டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ், நியூரா-லிங்க், தி போரிங் கம்பெனி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலோன் மஸ்கை 10 கோடிக்கும் அதிகமானோர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள்.

தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் செல்வாக்கு மிக்கவராக அறியப்பட்ட எலோன் மஸ்க் இப்போது உலகின் முக்கிய பிரபலமாக உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில், தனது உடல் எடை குறித்த அவரது பதிவு சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சீரான இடைவெளியில் உணவை தவிர்ப்பது என்பது காலை அல்லது இரவு உணவை தவிர்த்து 16 மணி நேரம் பட்டினி கிடப்பது அல்லது வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாள் சாப்பிடாமல் இருப்பது, அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் கலோரி குறைவான உணவை சாப்பிடுவது என பல வகைப்படும்.

அதேபோல், உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்சோர்வை தவிர்க்க அவ்வப்போது திரவ பானங்களை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும்.

அந்த வகையில், எலோன் மஸ்க் எந்தமாதிரியான உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.