சென்னை: சென்னையில் நேற்று பெய்த மழை காரணமாக, பல இடங்களில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததால்,2 பேர் பலியான சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று மதியம் முதல்  பரவலாக கனமழை பெய்தது. இதனால், சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழைநீரில் மிதந்தன. சுரங்க பாதைகள் தண்ணீரால் மூழ்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.

கனமழை காரணமாக,  திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கியது. சென்னையில் சில சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெய்த மழை காரணமாக, பல இடங்களில் மின்வயர் அறுந்து விழுந்து, மழைநீரில் மின்சாரம் பாய்ந்தது.  சென்னை மயிலாப்பூரில் வீட்டின் வெளியே தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததால், அது தெரியாமல் தண்ணீரில்  கால் வைத்த13 வயது சிறுவன் லட்சுமணன் உயிரிழந்தார். அதேபோல் சென்னை ஓட்டேரியில் நியூ பேரன்ஸ் சாலையில் மின்சாரம் பாய்ந்து  மூதாட்டி தமிழரசி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவங்கள்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.