சென்னை

நேற்று சென்னையில் பெய்த கனமழை குறித்து எச்சரிக்கை விடுக்காததற்குச் சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

 

நேற்று சென்னை மற்றும் புறந்கர் பகுதிகளில் திடீர் என கனமழை பெய்தது.  இதனால் நகரில் பல்வேறு பகுதிகள் மழை நீர் தேங்கி வெள்ளத்தில் மிதக்கின்றன.   சாலைகளில் தேங்கிய மழை நீரினால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.  இதனால் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை  பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து எவ்வித முன்னெச்சரிக்கையும் வெளியிடவில்லை.  இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   இவ்வளவு  பெரிய மழையை முன்கூட்டியே கணிக்காதது ஏன எனக் கேள்விக் கணைகளை நெட்டிசன்கள் தொடுத்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “வடக்கு  தமிழகம் அருகே வளிமண்டல சுழற்சி நிலவி வந்தது. தமிழக கரையை அது நெருங்கும் வேகமும் காலை 5.30 மணி வரை குறைவாகவே இருந்தது. ஆகவே 31-ம் தேதி அதிகாலை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

திடீர் என சில மணி நேரங்களில் வானிலையில் மாற்றம் நிகழ்ந்து வளிமண்டல சுழற்சி சென்னையை நெருங்கியது.

எனவே, கடலோரப் பகுதியில் உள்ள இடங்களில் சில மணி நேரத்தில் மழை கொட்டி தீர்த்துவிட்டது. இந்த மழை மேகங்கள் அதிக உயரத்திலும் இல்லை. சுமார் 3 கி.மீ. உயரத்திலேயே இருந்தன. இதுபோன்ற வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பது சிரமம்.” என விளக்கம் அளித்துள்ளார்.