சென்னை: தமிழத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மின்கட்டண பாக்கி  ரூ.3,351 கோடி அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இலவச மின்சார பயன்பாடு என கூறப்படுகிறது. இந்த நிலையில்,  தமிழத்தில் உள்ளாட்சி அமைப்புகள்  தாங்கள் செலுத்த வேண்டிய மின்கட்டணங்களை செலுத்தாமல் இருந்து வருவதாகவும், இதனால், கடந்த 3 ஆண்டுகளில்  3,351 கோடி ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளான 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 329 டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் 385 ஒன்றியங்களில் உள்ள 12,524 ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை போன்றவற்றுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், குடிநீர் வாரியம் போன்றவற்றுக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆனால், உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட அரசு துறைகள், மின்வாரியத்துக்கு முறையாக மின்கட்டணத்தை செலுத்துவதில்லை. ஏற்கெனவே, தமிழக மின்வாரியத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. இதைக் காரணம் காட்டி திமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.

வீட்டு மின்இணைப்புகளில் மின்பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின்இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர், அபராதம் செலுத்தினால், மீண்டும் மின்இணைப்பு வழங்கப்படும். இதனால், தனிநபர்கள் குறித்தக் காலத்துக்குள் மின்கட்டணத்தை செலுத்துகின்றனர். ஆனால், 60 நாட்கள் கால அவகாசம் வழங்கியும் உள்ளாட்சி அமைப்புகள் பல மாதங்களாக கட்டணம் செலுத்தாமல் உள்ளன. அதேபோல், குடிநீர் வாரியம் உள்ளிட்ட சில அரசு நிறுவனங்களும் மின்கட்டணத்தை சரியாக செலுத்துவதில்லை.

கடந்த 2022-24ம் ஆண்டு வரை தண்ணீர் இல்லாத ஆழ்துளை குழாய் கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டிகள் குறித்து கணக்கெடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. குடிநீர் வாரியம், பள்ளிகள், விடுதிகள், அரசு அலுவலகம் உள்ளிட்ட பிற அரசு துறைகளை சேர்த்து 1.07 லட்சம் மின்இணைப்புகளில் ரூ.4,335 கோடி மின்கட்டண பாக்கி உள்ளது. இதில், குடிநீர் வடிகால் வாரியம் மட்டும் ரூ.1,900 கோடி பாக்கி வைத்துள்ளது. உள்ளாட்சி அமைப்பு, அரசின் பிற துறைகள் என தமிழக அரசு மூலம் செலுத்த வேண்டிய மின்கட்டணம் ரூ.7,351 கோடியாக உள்ளது.

கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடி மின்கட்டண பாக்கி இருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.3,351 கோடி அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.