சென்னை: திருப்பதி கோயில் லட்டு செய்ய பயன்படுத்த வழங்கப்பட்ட கலப்பட நெய் விவகாரத்தில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை  காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ குழு மனு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாரிக்கப்பட்ட பிரசாதங்களில் விலங்குகளின் கொழுப்பு கலந்த கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக இப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.  இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, இது தொடர்பாக கடந்த ஆண்டு  (2024) நவம்பர் 25-ம் தேதி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், சிபிஐ அதிகாரிகள் மற்றும் ஆந்திர போலீஸார் அடங்கிய புலனாய்வு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு திருப்பதி கோவிலுக்கு நெய் சப்ளை செய்து வரும் அனைத்து நிறுவனங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டது. இதையடுத்து,  தமிழ்நாடடில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவன தலைவர் உள்பட   4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ புலனாய்வுக் குழு மனு தாக்கல் செய்துள்ளது.

கலப்பட நெய் சம்பவந்தமாக சிபிஐ குழுவினர், திண்டுக்கல் ஏஆர் டயரி புட்ஸ் நிறுவனம்,  உத்தராகாண்ட், ஸ்ரீ காளஹஸ்தி,  உத்தரகாண்ட்டில் உள்ள நிறுவனம் உள்பட பல இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து,  உத்தராகாண்ட் மாநிலம் ரூர்கேரியில் உள்ள போலோபாபா ஆர்கானிக் டயரி இயக்குநர்கள் விபிஎஸ் ஜெயின், போமில் ஜெயின், ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள பெனுபாக்காவில் அமைந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவி டயரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வ சவடா, திண்டுக்கல் ஏஆர் டயரி புட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ராஜ் ராஜசேகர் ஆகிய 4 பேரை பிப்ரவரி 9ந்தேதி அன்று  சிபிஐ காவல்துறையினர் கைது செய்தனர்.   பின்னர், அவர்கள் திருப்பதி அழைத்து வரப்பட்டு,   திருப்பதி கூடுதல் முனிசீஃப் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அவர்களை ஆஜர் படுத்தினர். இவர்கள் 4 பேரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, அவர்கள் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் 10 நாட்கள் வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ புலனாய்வு குழு தலைவர் வீரேஷ் பிரபு தலைமையிலான குழு திருப்பதி நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.