என். சொக்கன்

தேர்தலைமுன்னிட்டுத் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரம்.
இந்தச் சொல் பிரசாரம், பிரச்சாரம் என இருவிதமாகவும் எழுதப்படுகிறது. இதற்கான நல்ல, அழகிய தமிழ்ச்சொல்லாக, ‘பரப்புரை’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.
கணிதத்தில் ‘பரப்பு’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்போம், ஒரு சதுரத்தின் பரப்பு என்பது, அதன் பக்கத்தை அதனாலேயே பெருக்குவதால் கிடைக்கும், ஒரு செவ்வகத்தின் பரப்பு என்பது, அதன் இரு பக்கங்களையும் பெருக்குவதால் கிடைக்கும், இப்படி ஒவ்வொரு வடிவத்துக்கும் பரப்பு சூத்திரங்களை மனப்பாடம் செய்திருப்போம்.
பரப்பு என்பது பரவிக்கிடக்கும் அளவு. ஒரு வட்டத்தையோ செவ்வகத்தையோ தரையில் வரைந்தால், அது எந்த அளவு பரவுகிறது என்பதைக் குறிக்கிறது.
மொட்டைமாடியில் மிளகாயைக் காயப்போடும்போது, ‘நல்லாப் பரப்பிவை, அப்போதான் சீக்கிரமாக் காயும்’ என்பார்கள். சூரிய வெளிச்சம் விழும் இடத்தை ஒளிப்பரப்பு என்பார்கள், நிழல் விழும் இடத்தை நிழல்பரப்பு என்பார்கள்.
அதுபோல, தேர்தல் பரப்புரை என்றால், பரப்புஉரை, ஒரு கட்சி தன்னுடைய தேர்தல் கண்ணோட்டத்தைப் பரப்புகின்ற உரை.
இந்த ‘உரை’ என்ற சொல்லைத் தமிழ்ப்பாடத்தில் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்: செய்யுளுக்குப் பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை, விரிவுரை, எழிலுரை என்று நீளும்.
உதாரணமாக, பதவுரை என்றால், பதம்பதமாக, ஒவ்வொரு சொல்லாக விவரிப்பது, பொழிப்புரை என்றால், சொற்பொழிவுபோல் செய்யுளின் சாரத்தைச் சொல்வது, விளக்கவுரை என்றால், செய்யுளை விளக்குவது… இப்படிப் பலவிதமான உரைகள் உண்டு.
மற்ற புத்தகங்களுக்கும் முன்னுரை, பின்னுரை, என்னுரை, பதிப்புரை, மதிப்புரை போன்றவற்றைப்பார்க்கிறோம். நூலை ஒருவர் வாசிக்குமுன் அதனை அறிமுகப்படுத்துவது முன்னுரை, வாசித்தபின் கூடுதல் விவரங்களை வழங்குவது பின்னுரை, நூலாசிரியர் நூல்பற்றிய தன் கருத்துகளைச் சொல்வது என்னுரை, பதிப்பாளர் நூல்பற்றிய தன் கருத்துகளைச் சொல்வது பதிப்புரை, இன்னொருவர் நூலை மதிப்பிட்டு அதன் சிறப்புகளைச் சொல்வது மதிப்புரை… இப்படி இங்கேயும் பலவிதமான உரைகள் உண்டு.
சிலர் ‘உரை’ என்பதைத் தவறாக ‘உறை’ என்று எழுதிவிடுவார்கள், அந்த ‘உறை’க்கு வேறு பொருள்: கத்தியை வைப்பது உறை, தங்கத்தை உறைத்துப்பார்ப்பது உறைகல், நீர் பனிக்கட்டியாகும் செயல் உறைதல்.
முந்தைய பத்தி, உறைபற்றிய உரை!
(தொடரும்)