சென்னை: தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 1950 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாநில  தேர்தல் ஆணையர்  சத்தியபிரதா சாகு தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிய உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு , இந்த தேர்தலில் வாக்களிக்க முதல் தலைமுறை வாக்காளர்கள் 10,90,547 பேர் உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் மொத்தம்  6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர்.  இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 3.17 கோடி  பேர் என்றார். மேலும், இவர்களில்,  85 வயதிற்கு மேல் 6,13,991 வாக்காளர்கள் மற்றும் 4,61,730 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக கூறியவர், மாநிலம் முழுவதும், இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருந்த நிலையில், இந்த முறை  கூடுதலாக177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.  அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும்,   தேர்தல் பணியில் 4 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். இவர்களில்,  39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மேலும்,  ஏப்ரல் 1-ந்தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்.

தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு  1950 என்ற எண்ணில்  தொடர்புகொண்டு பேசலாம் என்றவர்,  இதுவரை தமிழ்நாடு முழுவதும் ரூ.69.70 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரொக்கம் மட்டும் ரூ.33.31 கோடி. வருமானவரித்துறை மூலம் ரூ.6.51 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அரசியல் கட்சிகளின் சார்பில், 648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.  என்றவர், தேர்தல் விதிமுறைகளை மீறி  தனியார் கட்டிடங்களில் இடம்பெற்றிருந்த  1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.