தேர்தலில் நிற்பதற்கு இந்தமுறை உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு தரப்படமாட்டாது என்றும், அவர் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் நிறுத்தப்பட்டுள்ளார் அவர்.

அகில இந்திய அளவிலும் சரி, தமிழ்நாடு அளவிலும் சரி வாரிசு அரசியல் என்பது, அக்காலம் முதலே பரவலாக அடையாளம் ஆகிவிட்ட நிலையில், இரண்டாம் தலைமுறையாக தனக்கு கிடைத்த மகுடத்தை, மூன்றாம் தலைமுறைக்கு கடத்த விரும்புகிறார் ஸ்டாலின். எனவே, அதைப்பற்றி பேசுவதற்கு இங்கே ஒன்றுமில்லை.

நாம், உதயநிதிக்கான தேர்தல் வாய்ப்பு குறித்து மட்டுமே பேசுவோம். தனக்கான கட்சித் தலைமை பதவியையே கிட்டத்தட்ட 65 வயதில்தான் பெற்றார் ஸ்டாலின். பதின்ம வயதில் தொடங்கிய தனது அரசியல் வாழ்வில், இவர் நீண்ட காத்திருப்புக்கு உள்ளானார். கடந்த 1977ம் ஆண்டே சட்டமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டியவர், 1984ம் ஆண்டுதான் வாய்ப்பு பெற்றார்.

அதேபோன்று கடந்த 1989ம் ஆண்டே அமைச்சராக வந்திருக்க வேண்டியவர், 2006ம் ஆண்டுதான் அந்த வாய்ப்பை பெற்றார்.

ஆனால், தன்னைப் போன்றே தன் மகனை காக்க வைக்குமளவிற்கெல்லாம் திமுக தலைவருக்கு நிச்சயமாக கால அவகாசம் இல்லை என்பது நம்மால் புரிந்துகொள்ளக்கூடியதே!

இந்தத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படாது; மாறாக, அவர் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுப்பப்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அவருக்கு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி போன்ற ஒரு பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளதன் மூலம், தொகுதியில் வெற்றி வாய்ப்பையும் உறுதி செய்தாகிவிட்டது மற்றும் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பையும் சேர்த்தும் வழங்கியாகிவிட்டது.

அவர் இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், அவரை அரசியல் களத்தில் மக்கள் அங்கீகரித்துவிட்டார்கள் என்று சொல்வதற்கும் வழியேற்படும்!