சேலம்

திகாரிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயாராக இருக்க வேண்டும் தமிழக தேர்தல் ஆணையர்  கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 தேதிகளில் தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் நடந்தது.  பிறகு மாவட்டங்கள் பிரிப்பு காரணமாகத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்குக் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரு கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.

இன்னும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. தமிழக மாநில தேர்தல் ஆணையம் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிக்கான நகர்ப்புற தேர்தலை விரைந்து நடத்தத் தீவிரம் காட்டி வருகிறது.   இதையொட்டி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் சேலத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார். தேர்தல் பணிகளைச் சட்டத்திற்குட்பட்டு செய்தால் எவ்வித பிரச்சினையும் வராது என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.