‘கிரிமினல்’ வேட்பாளர்களுக்கு ‘கிடுக்கிப்பிடி’ போட்ட தேர்தல் ஆணையம்: குற்ற வழக்குகள் குறித்து செய்தித்தாள், ஊடகங்களில் விளம்பரப்படுத்த ஆணை

டில்லி:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு விவரங்கள் குறித்து, 3 முறை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. கட்சி வித்தியாசமின்றி அனைத்து கட்சிகளிலும் கிரிமினல் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.  இவர்களை போன்றவர்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப் படுவதால், எந்தவித பிரயோஜனங்களும் இல்லை.

மக்கள் மன்றத்துக்கு சிறந்த திறமையான, குற்ற வழக்குகள் இல்லாத சிறந்த உறுப்பினரை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் அதிரடி முடிவை வெளியிட்டு உள்ளது.

அதன்படி,   தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அதன் விபரங்களை பகிரங்கமாக செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சிகளில் கட்டாயமாக விளம்பரம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

பொதுவாக தேர்தல் வேட்புமனுவுடன், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், வழக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தற்போது, வேட்பாளர்கள் குறித்த விவரம்  மக்களிடம் நேரடியாக சென்றடையும் வகையில், கிரிமினல் வேட்பாளர்களுக்கு செக் வைத்துள்ளது.

அதன்படி, வேட்புமனுவில் கிரிமினல் வழக்கு இருப்பதாக தெரிவித்துள்ள வேட்பாளர்கள்,  தேர்தல்  தங்கள் மீது என்னென்ன வழக்கு உள்ளது. அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த முழு விபரங்களுடன் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், வேட்பாளர்களின் தகுதிகள் குறித்து மக்கள் நன்கு அறிந்தகொள்ளும் வகையில், தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு வரை  மூன்று தடவை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற புது உத்தரவை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடி உத்தரவு வேட்பாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Candidates Must Publish Criminal Records, criminal Candidates, criminal Candidates  Publish Criminal Records In Media, election commission
-=-