கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் 4 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 45 வீடுகள் அமைந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதன் பின்னர் குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்களுக்கு செல்வதில் பிரச்சினை உருவாகியது. அவர்களுக்கும் முகாமில் உள்ளவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களை கண்காணிக்க வேண்டும். இப்பகுதியில் போதை பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், குளத்துள்வாய்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கியிருந்த கோழிப்பண்ணை ஷெட்டை தங்களுக்கு விவசாய விளை பொருட்கள் காய வைக்கும் களமாக பயன்படுத்த வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதைததொடர்ந்து கடந்த ஏப்ரல் 17-ம் தேதி கிராம மக்கள் சார்பில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் சரல் மண் கொட்டி சமன் செய்தனர். இதற்கு முகாம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மறுநாள் (ஏப்ரல் 18-ம் தேதி)  கிராம மக்களுக்கும் முகாமை சேர்ந்தவருக்கும் இடையே பிரச்சினை உருவானது.  இதையடுத்து அங்கு வந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த  பேச்சுவார்த்தையில்  எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இடமாற்றம் செய்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிப்போம் இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என அறிவித்தனர்.

அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. குளத்துள்வாய்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தயாராக இருந்தனர். இந்த வாக்குச்சாவடியில் 453 ஆண்கள், 530 பெண்கள் என மொத்தம் 983 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், யாரும் தங்களது வாக்கினை செலுத்த முன்வரவில்லை. மேலும்,  இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட குளத்தூள்வாய் பட்டி, குமார கிரி, சோத்து நாயக்கன்பட்டி, அம்மா மடம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லாமல் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்தனர். வாக்காளர்கள் இல்லாமல் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

[youtube-feed feed=1]