லக்னோ:

யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில்,  பசு பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக 8 அதிகாரிகளை மாநிலஅரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. இது அதிகாரிகள் மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

யோகி பதவி ஏற்றது முதல்,உ.பி. பசு மாடுகளை பேணி காக்கும் வகையில் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு கோசாலைகள் அமைத்து பராமரித்து வருகிறது. இந்த நிலையில்,  பிராயாக்ராஜ் பகுதியில் உள்ள அரசு கோசாலைகளில் அண்மையில் நோய் தாக்குதலால் 35 பசுமாடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து ஆய்வு செய்த முதல்வர் யோகி, அலட்சியமாக பணியாற்றியதாக கூறி 8 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கால்நடைகள் மற்றும் தங்குமிடங்களை பராமரிப்பதில் திறமையின்மை இருப்பதாகக் கூறியுள்ள யோகி, எதிர்காலத்தில் பசு பராமரிப்பில் அரசு ஊழியர்கள் அலட்சியம் காட்டக் கூடாது என்றும் மீறினால் கால்நடை பராமரிப்பு சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதலமைச்சரின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.