டில்லி

திரங்கா டீவி அதிபர் கபில் சிபல் இதுவரை ஊதியமே அளிக்காமல் உள்ளதால் ஊழியர்கள் கோபம் அடைந்துள்ளதாக டிவியின் ஆலோசக ஆசிரியர் பர்கா தத்.தெரிவித்துள்ளார்

இந்த வருடம் ஜனவரி மாதம் ஹார்வெஸ்ட் டிவி என்னும் ஒரு புதிய தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த மாதம் அதன் பெயர் திரங்கா டிவி என மாற்றப்பட்டது. இந்த டிவியின் உரிமையாளர் மூத்த காங்கிரஸ் தலைவரான கபில் சிபல் ஆவார். இந்த டிவியின் நிதியாளர் அவர் மனைவி பிரமிளா சிபல் ஆவார். இந்த தொலைக்காட்சியின் ஆலோசனை ஆசிரியராக பர்கா தத் பணி புரிந்து வந்தார்.

சமீபத்தில் பர்கா தத் இந்த தொலைகாட்சி குறித்து பல டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அந்த பதிவுகளில் அவர், ”திரங்கா டீவி அதிபர்களான கபில் சிபல் மற்றும் அவர் மனைவி ஆகியோர் இந்த தொலைக்காட்சியின் 200 ஊழியர்களுக்கு இதுவரை ஊதியமே அளிக்காமல் உள்ளனர். ஆறு மாதமாக ஊதியம் வழங்காததோடு அவர்களை பணியில் இருந்து விலகச் சொல்லி வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த தொலைக்காட்சியில் பணி புரியும் பலர் ஏற்கனவே பல ஊடகங்களில் நல்ல ஊதியத்துடன் பணி புரிந்து வந்தவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு குறைந்தது 2 வருடங்களுக்கு தொடர்ந்து பணி அளிப்பதாக கபில் சிபல் கொடுத்த வாக்குறுதியை நம்பி அவர்கள் இங்கு பணியில் சேர்ந்துள்ளனர். ஆனால் தற்போது கபில் சிபல் மற்றும் அவர் மனைவி ஆகிய இருவருமே ஊழியர்களுடன் பேசக்கூட தயாராக இல்லை. எனவே அனைத்து நேரடி ஒளிபரப்புகளும் 48 மணி நேரத்துக்கு ரத்து செய்யபட்டுள்ளன.

கபில் சிபல் மனைவி பிரமிளா தாம் நடத்தி வந்த மாமிச தொழிற்சாலையை தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட தராமல் மூடி விட்டதாகவும் இந்த பத்திரிகையாளர்கள் ஆறு மாத ஊதியம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தொழிலாளர்களை ஏற்கனவே ஏமாற்றியது போல் தற்போது பத்திரிகையாளர்களையும் ஏமாற்றுகிறார் என்பது அருவெறுக்கத்தக்கதாகும்.

தொழிலாளர் நலன் பற்றி போராடும் கபில் சிபல் தனது தொலைக்காட்சி ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்காதது குறித்து கவலைப்படாதது ஏன்? மாறாக அவர்களை பணியில் இருந்து இழப்பீடு இல்லாமல் அனுப்ப நினைப்பது ஏன்? மோடியின் ஆட்சியால் தமது சேனலுக்கு வருமானம் வரவில்லை எனவும் அதனால் ஊதியம் அளிக்கவில்லை எனவும் பொய் தகவல் கூறுவது ஏன்?

ஊழியர்களுக்கு இதுவரை தொலைக்காட்சி நிறுவனம் எவ்வித ஊதியமும் வழங்காததால் அவர்கள் கோபம் அடைந்துள்ளனர். ஊழியர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை நான் தொடர்ந்து போராட உள்ளேன். கபில் சிபல் மற்றும் அவர் மனைவி இங்குள்ள பெண் ஊழியர்களை குறித்து தவறாக பேசுவதை நிறுத்த வேண்டும். இது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் இருவரையும் விசாரிக்க வேண்டும்.” என பதிந்துள்ளார்.