சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இறுதியாக சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, என்னை பழைய பழனிச்சாமின்னு நினைச்சிட்டிருக்கீங்களா ஸ்டாலின் அவர்களே, நடக்காது ஸ்டாலின் அவர்களே நடக்காது, நான் என்றைக்கும் அஞ்சி வாழ்ந்தது கிடையாது, எனது கருத்தை எங்கேயும் ஆணித்தரமாக பதிய வைப்பேன். அதற்கான துணிவை இறைவன் எனக்கு கொடுத்திருக்கிறான் என்று ஆவேசமாக பேசினார்.
அதிமுக பொதுக்குழுவில் இன்று தற்காலிக பொதுச்செயலாளர் பதவி மற்றும் ஓபிஎஸ் நீக்கம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இதையடுத்து, பொதுக்குழுவில், தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இறுதியில் சிறப்புரை ஆற்றினார். அப்போது, கட்சியைக் காக்க இடைக்கால பொதுச் செயலாளராக தன்னை தேர்ந்தெடுக்கப்பட்ட தற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் விரும்பிய தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக-வில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் உளமாற பாராட்டுக்கள்.
1974 இல் ஒரு கிளைச் செயலாளராக கட்சியில் சேர்ந்தேன். பின்னர் ஜெயலலிதா அணியில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அம்மா அவர்கள் எனக்கு அமைச்சர் பதவி தந்தார். அந்த பணியை சிறப்பாக செய்ததால் கூடுதலாக பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியும் எனக்கு வழங்கினார். எல்லா திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தினேன்.
நாம் செய்த பணிகளை தான் இன்று முதல்வராக ஸ்டாலின் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரு கட்சி என்றால் அது அதிமுக தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் சிறப்பாக ஆட்சியை அளித்தோம். நமது கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன? தினமும் கொலை, கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேலாக போதைப்பொருள்… எங்கே பார்த்தாலும் கஞ்சா விற்கிறது… எது கிடைக்கிறதோ எது கிடைக்கலையோ கஞ்சா எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் கடந்த ஒரு ஆண்டில் என்ன பலன் கிடைத்துவிட்டது என்ன திட்டம் புதிதாக கொண்டு வந்தீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசியவர்,“திமுக அரசு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. மு.க ஸ்டாலினின் ஆட்சி குடும்ப ஆட்சி அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள் இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது” என்றவர், என்னை பழைய பழனிச்சாமின்னு நினைச்சிட் டிருக்கீங்களா ஸ்டாலின் அவர்களே, நடக்காது ஸ்டாலின் அவர்களே நடக்காது, நான் என்றைக்கும் அஞ்சி வாழ்ந்தது கிடையாது, எனது கருத்தை எங்கேயும் ஆணித்தரமாக பதிய வைப்பேன். அதற்கான துணிவை இறைவன் எனக்கு கொடுத்திருக்கிறான் என்று ஆவேசமாக பேசினார்.
தொடர்ந்து, பன்னீர்செல்வம் குறித்து பேசும்போது, அண்ணன் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றை தலைமை குறித்து பேசியபோது அது தொடர்பாக அவரது வீட்டுக்கு தொடர்ந்து சென்று பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. ஒற்றை தலைமையின் தேவை குறித்து பேசினார்கள். அவர் அம்மாவுக்கு விசுவாசகமாக இருந்ததாக கூறினார். எங்கே நீங்கள் விசுவாசமாக இருந்தீர்கள்? ஓபிஎஸ் தான் நிறைய விட்டுக் கொடுத்ததாக கூறுகிறார். நாங்கள் தான் விட்டுக் கொடுத்தோம். அவர் என்ன விட்டுக் கொடுத்தார். எதையுமே விட்டுக் கொடுக்கவில்லை. ஓ. பன்னீர்செல்வத்துக்குக்கு எப்போது சுயநலம் தான். திமுக-வின் கைக்கூலி பன்னீர்செல்வம்” என்றும் கடுமையாக சாடினார்.