தமீமும் அன்சாரி

சென்னை:

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.வான தமீமும் அன்சாரி, பத்திரிகை டாட் காம் இதழிடம் தெரிவித்தார்.

அதி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகள் செயல்பட்டு வருகின்றன.  ஆனால் குடியரசு தலைவர் தேர்தலில் மூவரும் ஒருமிக்க, பாஜக ஆதரவு வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏவான மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும் நாகை தொகுதி எம்.எல்.ஏவுமான தமீமும் அன்சாரியை தொடர்புகொண்டு பேசினோம். இவர் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அக் கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

அவரிடம், “குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபோது, “அதிமுக கொறடா உத்தரவிட்டாலும் பாஜக வேட்பாளரை ஆதரிக்க முடியாது” என்றீர்கள். குடியரசு தலைவர் தேர்தலில் கட்சி கொறடா உத்தரவிட முடியாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருக்கிறதே..” என்றோம்.

அதற்கு தமீமும் அன்சாரி, “அப்படியா.. அப்படியானால் இரட்டி மகிழ்ச்சி” என்றார்.

குடியரசு தலைவர் தேர்தலில் அ.தி.மு.கவின் மூன்று அணிகளும் பாஜக வேட்பாளரை ஆதரிப்பது பற்றி கேட்டோம்.

அதற்கு தமீமும் அன்சாரி, “எங்களது மனிதநேய ஜனநாயக கட்சி, அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிதான். அக் கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுத்தான் நான் வென்றேன். அ.தி.மு.க. தலைமையிலான  ஆட்சி மீதமுள்ள காலத்தையும் எந்தவித இடையூறும் இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

தினகரன் – ஓ.பி.எஸ். – எடப்பாடி

ஆனால் சிறுபான்மயினருக்கு எதிரான மதவாதக் கட்சியான பாஜகவை நாங்கள் ஆதரிக்க முடியாது. அ.தி.மு.க.வும்கூட அப்படி ஓர் நிலைப்பாட்டைத்தான் எடுத்திருக்க வேண்டும்.

முன்னாள் முதல்லவரும் அ.தி.மு.க. பொதுச்செயலளராக பொறுப்பு வகித்தவருமான ஜெயலலிதா இப்போது இருந்திருந்தால் நிச்சயமாக பாஜக வேட்பாளரை ஆதரித்து இருக்க மாட்டார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் மூவருமே ஜெயலலிதாவின் கொள்களுக்கு, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு, இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

அவர்களது முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்ற தமீமும் அன்சாரி, “இப்போதாவது அவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்தார்.