“ஜெயலலிதாவிடம் அரசியல் பாடவம் கற்றேன் என்று அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மொத்தம் 14 எம்.எம்.ஏ-க்கள் மற்றும் 5 எம்.பி-க்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தினகரன் பேசியதாவது:
“எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை இங்கே கொண்டாடுவது தமிழக ஆட்சியைக் கவிழ்க்கும் செயலா? நான் வேகமாக பேசினாலும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுபவன் கிடையாது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எங்களால் ஆபத்து கிடையாது. மடியில் கனம் உள்ளதால் அவர்கள் அப்படி நினைக்கிறார்கள்.
சென்னையில் அமர்ந்துகொண்டு கட்சியை நடத்திவிடலாம் என நினைத்தால், அது பூனை கண்ணை மூடிக்கொண்டு இருண்டுவிட்டது என்பதற்குச் சமமாகும். அரசியல் பற்றி 23 வயதிலிருந்து ஜெயலலிதா பாசறையில் பயிற்சிபெற்றவன் நான்.
சசிகலா நினைத்திருந்தால் எங்கள் குடும்பத்தில் யாரையாவது முதல்வராக்கி இருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் அடைந்த சிரமத்தை தமிழகம் முழுமையும் அறியும். கூட்டத்துக்கு வர இருந்த மூன்று எம்.எல்.ஏ-க்களைக் கடத்தி வைத்துள்ளனர்.
எம்.எல்.ஏ.க்களை ஒளித்துவைத்தவர்கள் விரைவில் ஒழிக்கப்படுவார்கள் என்பது உறுதி. பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் நினைத்திருந்தால் டிசம்பர் 5 அன்றே பதவிக்கு வந்திருக்க முடியும்.
2,000 ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தமிழக அரசியல் நிலவரம்குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தரச் சொன்னார் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்கிறார்கள். நீதி விசாரணை நடக்கட்டும்.
அப்படி நடந்தால், முதலில் அவர்கள் தான் விசாரிக்கப்படுவார்கள். ஜெயலலிதா மரணத்தின்போது உடன் இருந்தவர்கள் அவர்கள்தான். தர்மத்துடன் போராட்டம் நடத்தும் அவர்கள் தர்மயுத்தம் நடத்துவதாகச் சொல்லிக்கொள்கிறார்கள்” என்று டிடிவி தினகரன் பேசினார்.