டெல்லி: இன்று காலை பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரிடம்   13 பக்க கோரிக்கை மனு வழங்கியதாகவும், தமிழகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
2 நாள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அதையடுத்து, இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பிரதமரிடம் 13 பக்க கோரிக்கை மனுவை கொடுத்த முதல்வர், பின்னர், தமிழக அரசியல் நிலவரம், புதிய திட்டங்கள் உள்பட  பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
பிரதமரிடம் வழங்கப்பட்ட  12 கோரிக்கைகள் குறித்து 13 பக்க மனுவில் கூறப்பட்டு என்ன என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது, இன்றையதினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளேன். நேற்றையதினம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். தமிழகத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள பணிகளை திறந்து வைக்க வேண்டுமென்றும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டுமென்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்தேன், அவரும் ஏற்றுக்கொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கின்றார்.

கல்லணை புனரமைப்புத் திட்டம், பவானி நவீனப்படுத்தும் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்ட வருமாறும், சென்னை, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ இரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய்த் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டுமென்றும் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கின்றேன், அவரும் இசைவளித்துள்ளார்.

கோரிக்கைகள் என்னென்ன?

கோதாவரி காவேரி இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் அதிகம் பயன்பெறும் காவேரி குண்டாறு இணைப்புத் திட்டம் மற்றும் காவேரி ஆற்றினை தூய்மைப்படுத்தும் “நடந்தாய் வாழி காவேரி திட்டம்” என இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் நிலை 2க்கு நிதியுதவி அளிக்க வேண்டும், நிவர் மற்றும் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் ஜனவரி மாதம் தொடர்ந்து அதிக மழை பொழிந்ததால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணம் வழங்குவதற்கு நிதியுதவி அளிக்க வேண்டும், கொப்பரைத் தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலையை கிலோ 93.60 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை உயர்த்த வேண்டும், தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு பன்னாட்டு நிதி நிறுவனத்திடமிருந்து நிதி ஆதாரம் பெற தகுந்த அனுமதி வழங்க வேண்டும், திருவள்ளூர் மாவட்டம், மணவூர் மருந்துகள் பூங்கா மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவக் கருவிகள் பூங்கா அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டும், இரண்டு மெகா டெக்ஸ்டைல் பூங்காக்களை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கின்றேன்.

ராணுவ தளவாட வளாகம்

தமிழகத்தில் சென்னை, சேலம், ஓசூர், கோவை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் இராணுவத் தளவாட வளாகம் அமைப்பதற்கு ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதை விரைந்து செயல்படுத்த வேண்டுமென்றும் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன்.

அதேபோல, எனது கோரிக்கையினை ஏற்று இலங்கை சிறையிலிருந்து இன்றையதினம் 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒன்றிரண்டு மீனவர்களையும் விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளேன். அதோடு, இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மீன்வள உட்கட்டமைப்பு நிதியில் மீன்பிடி துறைமுகங்களுக்கு நிதியுதவி கோரி தமிழ்நாடு அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கருத்துருவிற்கு விரைந்து அனுமதி வழங்கக் கோரிக்கை வைத்துள்ளேன். நான் வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

கேள்வி: எவ்வளவு நிதி கேட்டுள்ளீர்கள்?

பதில்: அதற்கென தனியாக கோரிக்கை மனு கொடுத்து துறைவாரியாக தேவைப்படுவதற்கு முழுமையாக பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

கேள்வி: நான்கு ஆண்டுகள் உங்கள் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி வழங்கி வந்துள்ளீர்கள். இந்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் உங்களுக்கு மனதிருப்தி அளித்திருந்தாலும், என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என ஏதாவது உங்களுக்கு உள்ளதா?

பதில்: இருபெரும் தலைவர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா கண்ட கனவை எங்களுடைய அரசு நிறைவேற்றி வருகிறது. கல்விக்கு முன்னுரிமை அளித்து, அதிகளவில் நிதியுதவி அளித்து, இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் ஏறத்தாழ 49 விழுக்காடு என அதிகமாக உள்ளது. அதேபோல அதிகமான கல்லூரிகளை திறந்துள்ளோம். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை தமிழகத்தில் திறந்து சாதனை படைத்துள்ளோம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 6 சட்டக் கல்லூரிகளை திறந்துள்ளோம். பல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறந்துள்ளோம். இவ்வாறு கல்விக்கு முன்னுரிமை வழங்கியதன் மூலம், இந்தியளவில் தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதேபோல, மருத்துவத் துறையிலும் தமிழகம் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைக்கப்பட்டுள்ளது. நான் 32 மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று மாவட்ட நிர்வாகம், மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் இதர துறைகளோடு இணைந்து துரிதமாக இந்நோய்ப் பரவலைத் தடுக்க தக்க ஆலோசனை வழங்கி, அதன்படி மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் குறைக்கப்பட்டு, கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நோய்ப் பரவலைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். அதிகளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்தியுள்ளோம். நடமாடும் மருத்துவக் குழுவினர் வீடுகள்தோறும் சென்று மக்களைச் சந்தித்து இந்நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து குணமடையச் செய்தார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆர்டிபிசிஆர் பரிசோதனை அதிகளிவில் மேற்கொள்ளப்பட்டது.

நீர் மேலாண்மை

2019 20ம் ஆண்டின் சிறந்த நீர் மேலாண்மைக்கான விருதை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. தமிழகம் நீர் பற்றாக்குறையுள்ள மாநிலமாக உள்ளதென்பது அனைவருக்கும் தெரியும். அண்டை மாநிலங்களிலுள்ள உபரிநீரை நம்பித்தான் தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்கக்கூடிய நீரைக்கூட சில நேரங்களில் வழங்க அண்டை மாநிலத்தவர்கள் மறுக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென்பதற்காக எங்களுடைய அரசு குடிமராமத்துத் திட்டம் கொண்டு வந்து ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகள் அனைத்தையும் தூர்வாரியதன் விளைவாகவும், தற்போது பருவமழை நன்றாக பொழிந்த காரணத்தினாலும் தமிழகத்திலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஊரணிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்திலுள்ள அனைத்து அணைகளிலும் நீர் நிரம்பியுள்ளது.

நிவர், புரெவி புயல்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கணக்கிட்டு முதற்கட்டமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, தொடர் மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், மானாவாரிப் பயிர்கள் சேதமடைந்துள்ளதையும் கணக்கெடுக்க அறிவுறுத்தியுள்ளேன். அதை பிரதமரிடம் தெரிவித்து உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான நிதியுதவியையும் மத்திய அரசு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்துள்ளேன். எனவே, எங்கள் அரசு தகுந்த நிவாரணத்தை வழங்கும்.

2 ஆயிரம் மினி கிளினிக்

இதற்கும் மேலாக, ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் வசிக்கின்ற இடத்திலேயே சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் துவக்கப்படும் என்று அறிவித்து படிப்படியாக துவக்கிக் கொண்டிருக்கின்றோம்.

நீட் தேர்வினால் அரசுப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு அதிக மதிப்பெண் பெற முடியவில்லை. சுமார் 41 சதவீதம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் சூழ்நிலையில், கடந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் அரசுப் பள்ளிகளில் படித்த 6 மாணவர்கள் தான் மருத்துவக் கல்வி படிக்க முடிந்தது. நானும் அரசுப் பள்ளியில் படித்த காரணத்தால், அந்த ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவக் கல்வி படிக்க வேண்டுமென்பதற்காக, அம்மாவின் அரசு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அளித்து அதன் மூலம் இப்போது 313 மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பும், 92 மாணவர்கள் பல் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்குகின்றபோது, அடுத்த ஆண்டு 450 மாணவர்கள் மருத்துவக் கல்லூரி சேர்ந்து படிக்கும் சூழ்நிலை உருவாகும் என்று கருதுகிறேன். பல் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு 150 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். மருத்துவக் கல்வி படிப்பதற்கு கூடுதலாக இடம் கிடைக்கும். மேலும், இந்த மருத்துவக் கல்வி படிப்பதற்குண்டான செலவையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வளவு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியிருக்கிறோம்.

ரூ.14 ஆயிரம் கோடி காவிரி குண்டாறு திட்டம்

நாங்கள் சொன்ன புதிய திட்டங்கள் அதாவது காவேரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை ரூபாய் 14,000 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றவிருக்கிறோம். இந்தத் திட்டத்தின் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறுகின்றனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவிருக்கின்றது. அதேபோல, கோதாவரி காவேரி இணைப்புத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு விரைந்து அனுமதி கொடுக்க வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டிருக்கிறோம். தமிழ்நாடு மக்களுக்கு, விவசாயிகளுக்கு தேவையான நீரைப் பெற்றுத் தர எங்களுடைய அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது.

விபத்து குறைவு

நல்ல சாலை வசதிகள் செயல்படுத்தியதன் மூலம் சாலை விபத்துக்களை குறைத்திருக்கிறோம். தேசிய அளவில் சாலை விபத்துக்களை குறைப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் விபத்துக்கள் குறைந்திருக்கிறது என்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார். நாங்கள் நல்ல சாலைகளை உருவாக்கித் தந்திருக்கிறோம். சாலை சந்திப்புகளில் உயர்மட்டப் பாலங்களைக் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இரயில்வே பாலங்கள் அதிகமாகக் கட்டிக் கொடுத்திருக்கிறோம். இப்படி பல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் பேசவில்லை

கேள்வி: உள்துறை அமைச்சரை சந்திக்கும்போது  கூட்டணி குறித்து பேசினீர்களா, தமிழகத்தின் தேவை குறித்து பேசுனீர்களா?

பதில்: அரசியல் பேசவில்லை.  நிவர் மற்றும் புரெவி புயல் மற்றும் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு மத்திய அரசிடமிருந்து தேவையான நிதியுதவி அளிக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறோம்.

கேள்வி :  தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் நிதி குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க கோரிக்கை விடுத்தீர்களா?

பதில்: அதுதான் நான் கேட்டிருக்கிறேன். காவேரி குண்டாறு திட்டம், நடந்தாய் வாழி போன்ற முக்கியமான திட்டங்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டுமென்று கேட்டிருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டிய மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2க்கு ரூபாய் 62,000 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றவிருக்கிறோம். அதற்கு மாநில அரசு 50 சதவீதம், மத்திய அரசு 50 சதவீதம் நிதி அளிக்கும்.

கேள்வி: அமித்ஷா, மோடி ஆகிய 2 பெரும் தலைவர்களை  சந்தித்தீர்கள், அப்போது கூட்டணி குறித்து விவாதித்தீர்களா?

பதில்: அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. நான் வந்தது, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகத்தான். தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்தேன். அரசியல் எதுவும் பேசவில்லை, பேசுவதற்கு தகுந்த நேரமும் இல்லை. ஏனென்றால் தேர்தல் வருவதற்கு காலம் உள்ளது.

இவ்வாறு அவர்  கூறினார்.